*தஞ்சாவூர் போலீசார் அதிரடி
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகளை திருடிய உறவினர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் மெயின்ரோட்டில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன்.
இவர், பெங்களூருவில் ஐ.டி நிறுவன ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வளர்மதி. அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை. இந்நிலையில் கடந்த 2ம்தேதி இவரது வீட்டில் உறவினர் ஒருவரது நிலத்தின் மூலப்பத்திரம் இருந்துள்ளது.
அந்த பத்திரத்தை எடுத்து தரும்படி உறவினர் கடந்த 2ம் தேதி கேட்டுள்ளார். இதனையடுத்து வளர்மதி, தன்னுடன் பணியாற்றும் பணியாளர் ஒருவரை அனுப்பி, வீட்டு அருகில் கடை வைத்திருக்கும் முதியவரிடம் சாவியை வாங்கி வீட்டை திறந்து பீரோவில் இருக்கும் பத்திரத்தை எடுத்து கொடுக்கும்படி தெரிவித்துள்ளார். அதன்படி, உறவினரும் அவரது பத்திரத்தை எடுத்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்து இருந்த பாலசுப்பிரமணியன், அடகு வைக்க பீரோவில் இருந்த நகைகளை தேடிய போது 58பவுன் மாயமாகி இருந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக மனைவிடம் கேட்டபோது, கடந்த 2ம் தேதி உறவினர் வீட்டிற்கு வந்து பத்திரத்தை எடுத்து சென்ற தகவலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பாலசுப்ரமணியன் தஞ்சாவூர் மேற்கு போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப் இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆசிரியை வீட்டில் நகைகளை திருடி சென்றது வளர்மதியின் உறவினரான தஞ்சாவூர் அடுத்த திட்டை அக்ரஹாரத்தை சேர்ந்த சுதாகர் (39) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், சுதாகரை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ரூ.40 லட்சம் மதிப்பிலான நகைகள பறிமுதல் செய்தனர்.
The post ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகையை திருடிய உறவினர் கைது appeared first on Dinakaran.