*வாலிபர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாலிபர் கைதானார்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் அருகே சித்தார்கோட்டை கடலோர பகுதியில் கடல் குதிரை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேவிப்பட்டிணம் மரைன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், எஸ்ஐக்கள் தாரிக்குல் அமீன், கதிரவன், நுண்ணறிவு பிரிவு ஏட்டு, இளையராஜா, போலீசார் கண்ணன், காளிமுத்து ஆகியோர், சித்தார்கோட்டை கடற்கரைப் பகுதியில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது சித்தார்கோட்டையை சேர்ந்த ஹபீப் (38) என்பவர் வீட்டில் சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.
இதில் அரசால் தடை செய்யப்பட்ட 7 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமார் 50 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்து ஹபீப்பை கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் பொருட்களை ராமநாதபுரம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகளை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டது தெரிய வந்தது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சத்திற்கு மேல் இருக்கும் என மரைன் போலீசார் தெரிவித்தனர்.
The post இலங்கைக்கு கடத்த பதுக்கிய 50 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.