முத்துக்கள் முப்பது
1. முன்னுரை
மே 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை வைகாசி மாதம். (வைகாசி மாதத்தின் முதல் பகுதியாக இருக்கும்) வசந்த காலத்தின் இரண்டாவது மாதம் தான் வைகாசி மாதம். எனவே, பல திருக்கோயில்களில் வசந்த விழாக்கள் எனும் கோடை விழாக்கள் நடைபெறும். கோயில்களில் வெளிப் பிரகாரங்களை ஒட்டி வசந்த மண்டபம் இருப்பதை அறிவோம். அந்த மண்டபத்தைச் சுற்றி அழகிய தோட்டங்களும், பொய்கைகளும் இருப்பதைக் காணலாம்.
சோலைகளில் இளைப்பாறும் காலமான வசந்த காலத்தில், மாலை நேரத்தில், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி இறைவன் இளைப்பாறுகிறார். சோலைகள் இல்லாத ஆலயங்களில் பூ பந்தல் அமைத்து இறைவனை எழுந்தருளச் செய்வார்கள். இதுதவிர, அதி தீவிரமான அக்னி நட்சத்திரக் காலமான இக்காலத்தில் அம்மன் கோவில்களில் மிகச் சிறப்பான முறையில் சாக்கைத் திருவிழா முதலிய கோடை விழாக்கள் நடைபெறும். இந்த விழாக்களைப்பற்றி முத்துக்கள் முப்பது தொகுப்பில் காண்போம்.
2. புண்ணாக கௌரி விரதம்
இந்த ஆண்டு வைகாசி மாதத்தின் முதல் பகுதி அம்பாளுக்குரிய பல விரத தினங்களைக் கொண்டிருக்கிறது. மே 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புண்ணாக கௌரி விரதமும், 29ம் தேதி கதலி கௌரி விரதமும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி ஆரண்ய கௌரி விரதமும் என கௌரி விரதங்கள் வரிசையாக வருகின்றன. புண்ணாக கௌரி விரதம் இருப்பதால் வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். நோய் நொடிகள் தீரும். வீட்டில் கலசம் வைத்து அம்பாளை வழிபட மேற்படி சுபங்கள் நடை பெறும். குறைந்தபட்சம் கோலம் போட்டு விளக்கேற்றி அம்பாள் படத்திற்கு மாலை போட்டு விரதம் இருந்து வழிபடலாம். அருகில் உள்ள கோயி லுக்கு சென்று அம்பாளுக்கு விளக்கு போட்டு வருவதன் மூலம் இந்த விரதத்தின் பலன் கிடைக்கும்.
3. கதலி கௌரி விரதம்
அடுத்த நாள் 29.5.2025 வியாழக்கிழமை அன்று ரம்பா திருதியை மற்றும் கதலி கௌரி விரதம் வருகின்றது. கதலி என்றால் வாழை. விரதத்தின் போது, கௌரி தேவியை வாழை மரத்தடியில் வைத்து வழிபடுவது வழக்கம். அல்லது வாழை இலையில் ஆவாஹனம் செய்யலாம். கௌரி தேவிக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், கீர்த்தனைகள் பாடி, கௌரி யின் அருளைக் கோருவது வழக்கம்.பெண்களுக்கு திருமண பாக்கியம் விரைவில் நடைபெறவும், விரும்பிய மணவாழ்க்கை கிடைக்கவும், மண வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்கி அன்னியோன்யமான தாம்பத்தியம் நிகழவும் இந்த விரதம் பெண்களால் கடைபிடிக்கப்படுகிறது.வைகாசி மாத வளர்பிறை திருதியையும் கார்த்திகை மாத வளர்பிறை திருதியையும் ரம்பா திருதியை என்று போற்றப்படுகின்றன. இந்த நாளில் செய்யும் வழிபாடு சகல ஐஸ்வர்யங்களையும் தருவதோடு ஆரோக்கியமும் அழகும் மேம்படும்.
4. கோடைகாலமும் அம்மன் கோயில்களும்
கோடை காலமான சித்திரை, வைகாசி மாதங்களில் கோயில் திரு விழாக்கள் அதிகமாக நடத்துவதைக் காணலாம். குறிப்பாக கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் கோடை விழாக்களாக இந்த விழாக்கள் நடைபெறும். கோடை காலங்களில் கோயில்களில் அதிகமான விழாக்கள் நடை பெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். விவசாயப் பணிகள் நிறைவடைந்து அடுத்து ஆடி பட்டத்துக்காக காத்திருக்கும் இடைவேளையில் உற்சாகமாக கோயில் விழாக்களில் மக்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த முதுவேனில் காலத்தை தெய்வங்களும் உகப்பார்கள். பக்தர்களும் உகப்பார்கள்.
5. தமிழர்கள் உகந்த கோடை விழா
உத்தராயணம் என்பது தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி மாதம் வரை தட்சணாயன காலம். உத்திராயண காலத்தை தேவர்களின் பகல் காலமாகவும் தட்சிணாயன காலத்தை தேவர்களின் இரவுக் காலமாகவும் கொள்ளும் மரபு உண்டு. ஓர் ஆண்டை கார்காலம், குளிர் காலம், முன்பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில்காலம், முது வேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர். இந்த அறுவகை காலங்களில் இளவேனில் காலமும் முதுவேனில் காலமும் கோடை காலங்கள். இது கோயில் விழாக்களுக்கான காலம்.
6. கோடையில் வில்லவன் விழா
தமிழர் நிலப் பிரிவுகளான முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றுக்கு உரித்தான பருவகாலங்களைப் பற்றித் தொல்காப்பியம் பேசுகிறது. இதன்படி, முல்லை நிலத்துக்குக் கார் காலமும்; குறிஞ்சி நிலத்துக்குக் கூதிர் காலமும், முன்பனிக் காலமும்; மருதத்துக்கும், நெய்தலுக்கும் எல்லாப் பருவ காலங்களும், பாலை நிலத்துக்கு இளவேனில், முதுவேனில், முன்பனி ஆகிய காலங்களும் உரியவை. இளவேனில் விழா குறித்து கலித்தொகையில் உள்ளது. சித்திரை, வைகாசி ஆகிய வேனிற் பருவத்தில், காதல் தெய்வமான காமவேளுக்கு, ‘‘வில்லவன் விழா’’ கொண்டாடப்பட்டது.
7. ஏன் அம்மன் கோயில்கள் ?
முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போன நிலமே பாலை. விடலை, காளை, மறவர், மறத்தியர் பாலை நிலத்து மக்கள். பாலை நிலத்தின் கடவுள் ‘கொற்றவை’.கொற்றவைக்கு அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சி முதலியன படைக்கப்படும். கொற்றவை பவனி வரும்போது புல்லாங்குழல் இசைக்கப்படும். பாலை நில மக்கள் தாங்கள் போருக்குச் செல்லும் முன்னர் போரில் வெற்றியடைய தங்கள் தெய்வத்தை வழிபடுவர்.அது காலப்போக்கில் கிராமத்து தேவதை மற்றும் பல்வேறு அம்மன் கோயில் களாக மாறின. விழாக்களும் பெரும்பாலும் கோடை நாட்களில் நடந்தன நடந்து கொண்டிருக்கின்றன.
8. சமூகமும் அம்மன் விழாக்களும்
கோயில் திருவிழாக்கள் என்பது சமூகம் ஒன்றாகக் கூடி நடத்தும் திருவிழா. எளிய மக்கள் கோடை கால கோயில் விழாவை வெறும் ஆன்மிக உணர்வோடு மட்டும் அணுகுவதில்லை. தங்களுடைய உழைப் புக்கான உறுதியையும் உற்சாகத்தையும் பெறவும், சமூகமாக இணைந்து வாழவும் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அது மட்டும் இல்லாது, தங்களுடைய கலை உணர்வை வளர்த்துக் கொள்ளவும் இந்த விழாக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். பாரம்பரியமான இசை, நாடகம் போன்றவற்றை வளர்க்கும் களமாக இந்த விழாக்கள் விளங்குவது சிறப்பு. கோயில் திருவிழாக்கள் மூலம்தான் தெருக்கூத்து, நாட்டியம், இசை முதலிய கலைகள் வளர்ந்தன.
9. சாக்கை திருவிழா
கோடை விழாக்களில் அம்மன் கோயில்களில் நடைபெறும் சாக்கைத் திருவிழா மிக முக்கியமான திருவிழா. இது சித்திரை வைகாசி மாதங்களில் கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் நடைபெறும். ஊர் மக்கள் இந்த திருவிழாவில் ஒன்றாகக் கூடுவார்கள். மாலை நேரங்களில் சாக்கைக் கூத்து நடைபெறும். கரகம் சுமந்து,பால் குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்வர். கூழ் வார்த்தல் நடைபெறும். நிறைவு நாளில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். ஆடலும் பாடலும் என கிராமத்து கலைகளுடன் விடிய விடிய நடைபெறும். இது வசதிக்கேற்ற பத்து நாட்கள் முதல் ஐந்து நாட்கள், மூன்று நாட்கள், ஒரே நாள் என்று நடைபெறும்.
10. சாக்கைக் கூத்து
சாக்கைக் கூத்து என்பது புராணக் கதைகளைக் கூறி நடித்து ஆடப்படும் ஒரு கூத்து வகையாகும். இக்கூத்தினை ஆடுபவர் சாக்கையர் எனப்படுவர். பண்டைத் தமிழகத்தில் ஆடப்பட்டு வந்த இக்கூத்து இன்றும் நடைபெற்று வருகிறது.காத்தவராயன் கதை,அரிச்சந்திரன் கதை என பல புராணக்கதைகள் இதில் இடம் பெறும்.சாக்கைக் கூத்து நடைபெறும் இடத்தை “கூத்தம்பலம்” என்று கூறுவர். இது கோவில் அல்லது பொது இடத்தில் உள்ள தனிக் கட்டடமாகும். இவ்வம்பலத்தில் சாக்கையன் எனப்படுவோன் முக்காலி மீது அமர்வான். அவன் தலையில் விநோதமான சரிகைத் தலைப்பாகை காட்சி தரும். ஓரத்தில் பல நிறங்கள் அமைந்த- அகலத்தில் குறுகிய நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றிலும் அணிந்திருப்பான். அவ்வாடை கணக்கற்ற மடிப்புகளை உடையதாகவும் கண்களைக் கவரும் வகையிலும் இருக்கும்.
11. சிலப்பதிகாரத்தில் சாக்கைக் கூத்து
சிலப்பதிகாரத்தில் சாக்கியர் கூத்து பற்றிக் கூறப்பட்டுள்ளது. சேர நாட்டை ஆண்ட சேரன் செங்குட்டுவன், விண்ணுலகம் சென்ற கண்ணகிக்கு கோயில் எழுப்ப வேண்டி, இமயத்திலிருந்து கல்லைக் கொணர, வட நாடு சென்றான்; தன்னை எதிர்த்த ஆரிய அரசர்களை வென்று கல்லைக் கொணர்ந்தான். அவன் வஞ்சி மாநகர் மீண்ட போது, அவனது களைப்பைப் போக்க கூத்தச் சாக்கையன் நடனமாட வரவழைக்கப்பட்டான். சிலம்பில் \”பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக் கையன்\” என்ற வரிகளால் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்ட தென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது.
12. வெயிலும் மழையும்
வெயிலும் மழையும் உலகுக்கு இரண்டு கண்கள். சூரிய ஒளி (வெயில்) இல்லாவிட்டாலும் உலகம் மாண்டு விடும். மழை பொழியாவிட்டாலும் பூமியில் புல் கூட முளைக்காது. உயிர்கள் தழைக்காது. உயிர் வாழ இந்த இரண்டும் தேவை. இந்த இரண்டையும் மனிதன் தானே படைத்துக் கொள்ள முடியாது. படைத்தவனை (படைத்தவளை)த் தான் நம்பி இருக்க வேண்டும். அதிலும் நம்முடைய சமூகம் தெய்வத்தை தாய் நிலையில் வைத்துப் போற்றுகிறது.
தாய் தன் குழந்தைக்கு வேண்டுவனவற்றைத் தருவதைப் போல, தாய் தெய்வங்களும் இந்த உயிர்களுக்குத் தேவையானவற்றைத் தருவதால், இறைவனைத் தாயாக நினைத்து, அம்மன் வடிவத்தில் வழிபடுவது இங்கே மரபாக இருக்கிறது. மழையைத் தருகின்ற அம்மன் என்பதால் மாரியம்மன் என்ற பெயரோடும், வெயிலைத் தரும் தெய்வம் என்பதால் காய்ச்சல்கார அம்மன் என்ற பெயரோடும் பல அம்மன் கோயில்கள் இருக் கின்றன. அங்கே எல்லாம் கோடை விழாக்கள் நடைபெறுகின்றன. குளிர்ந் தாளம்மன், முத்துமாரி அம்மன் பச்சையம்மன் வெக்காளியம்மன் என்று பல அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.
13. வெயில் நோய்களும் அம்மன் பிரசாதமும்
கோடைகாலத்தில் மட்டும் பிரத்யேகமாக அம்மன் ஆலயங்களில் விழா என்பதற்கு காரணங்கள் உண்டு.கோடை காலத்தில் வெப்ப நோய்கள் அதிகம் தாக்கும். அதுவும் சித்திரை கடைசி சில நாள்களும் வைகாசியில் முதல் சில நாள்களும் வெப்பம் அதிகரிக்கும் அக்னி நட்சத்திர நாள்களல்லவா? அம்மை, தோல் நோய்கள்,கண் நோய்கள்,வயிறு சம்பந்தமான அஜீரணம்,போன்ற வெப்ப நோய்களும் தொத்து நோய்களும் அதிகம் தாக்கும். இந்த நோய்களி லிருந்து மக்களைக் காப்பாற்றவே அம்மன் கோயில்களைக் கட்டி வைத் தார்கள்.
14. வேப்பிலைக்காரி
வேப்பிலை மற்றும் கூழ் ஆகியவை தமிழ்நாட்டில், அம்மன் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேப்பிலை அம்மனுக்கு ஒரு சிறப்பு ஆடை யாகவும், கூழ் ஒரு முக்கிய படையலாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேப் பிலை வாசலில் வைத்து, அம்மனை வழிபடுவதால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையை ஆடையாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுத்துவதுண்டு. கேழ்வரகு, கம்பு, போன்ற தானியங்களை அரைத்து தயிர் சேர்த்துத் தயாரிக்கப்படும் கூழ், ஒரு பாரம்பரிய உணவு ஆகும்.
1. நோய்தீரும் மருந்து (medicine)வேப்பிலை, கூழ்
2. மருந்தகம் (hospital) அம்மன் ஆலயங்கள்,
3. மருத்துவர் (Doctor) அம்மன்.
15. கோடை உஷ்ணமும் சம்சார உஷ்ணமும்
கோடை உச்சத்தில் இருக்கும் பொழுது உடம்பு வேர்க்கிறது. தாகம் எடுக்கிறது. உடம்பு வாட்டம் கண்டு நிழலைத் தேடுகிறது. உடம்புக்கு ஏற்படும் அத்தனைத் துன்பங்களும் மனதிற்கும் ஏற்படுகிறது. நிழல் தேடி அலைகிறது. குளிர்ச் சியைத் தேடி ஓடுகிறது. இவை இரண்டையும் தர அம்மன் ஆலயம் கோடை விழாக்களை நடத்தி அழைக்கிறது. இந்த அம்மனுக்குத்தான் எத்தனை பெயர்கள் ? கருமாரியம்மன், முத்துமாரியம்மன், வெக்காளியம்மன்,வெயில் உகந்த அம்மன்,காய்ச்சல்காரம்மன்,மழைக்கு மாரி அம்மன்,காளியம்மன், த்ரௌபதி அம்மன்,தீப்பாய்ந்த அம்மன் ,பேச்சியம்மன், பெரிய அம்மன்,தண்டு மாரியம்மன்,ஏழை மாரிஅம்மன், சுந்தரமாரி அம்மன்,பனை அழகியம்மன், இப்படிப் பல பெயர்கள். அம்மன் ,கோடை வெயிலில் வரும் நோயிலிருந்து மட்டும் காக்கவில்லை. சம்சார (உலக வாழ்க்கை) உஷ்ணத்திலிருந்தும், தீவினையின் உஷ்ணத்திலிருந்தும் காப்பாற்றுகிறாள். இனி பல அம்மன் கோயில்களில் நடைபெறும் கோடை விழாக்களைப் பற்றிக் காண்போம்.
16. வெயில் உகந்த அம்மன், மேல பாறைக்குளம்
வெயில் உகந்த அம்மன் கோயில் மேலப்பாறைக்குளம், மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான அம்மன் கோயிலாகும். அம்மன் மீது சூரியனின் வெயில் படுவதால் வெயில் உகந்த அம்மன் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் கண்மாயின் கரையில் அமைந்துள்ளதால், காலையில் சூரியன் உதிக்கும்போதுவும், மாலையில் மறையும்போதுவும் அம்மன் மீது வெயில் படுகிறது. மதுரை திருப்பரங்குன்றம் மேலரத வீதியில் இந்தக்கோயில் அமைந்துள்ளது.51 சக்தி பீடங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் இங்கு உள்ளன.
17. மக்களோடு இணைந்த கதை
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு கதை உண்டு. அது புராணக் கதையல்ல. பெரும்பாலும் அம்மன் கோயில் கதைகள் அந்தந்தப் பகுதி வாழ்வியலோடு பொருந்தி இருக்கும். அங்கே உள்ளவர்கள் வாழ்க்கையில் சில காலங்களுக்கு முன் நடந்ததாக இருக்கும். வாய்வழியாகச் சொல்லப்பட்ட கதைகளாக இருக்கும். சில அம்மன்கள் அவர்கள் குலத்து முன்னோர்களாகக் கூட இருப்பார்கள்.
எனவே மற்றக் கோயில்களை விட அந்தந்த கிராமத்து அம்மன் கோயில்களுக்கும், அந்தந்த கிராம மக்களுக்கும் மிகுந்த நெருக்கம் இருக்கும். சிலருக்கு அந்த கோயில்களே குலதெய்வக் கோயில்களாக இருக்கும். சில கோயில்கள் ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்குச் சொந்தமான கோயில்களாக இருக்கும். பெரும்பாலும் தீப்பாய்ந்த நாச்சியார் கோயில் என்ற பெயரில் அமைந்த கோயில்கள் அந்தப் பகுதியில் உள்ள குடும்பத்தில் சில பல காலங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியைச் சொல்வதாக இருக்கும். அந்த வகையில் மேல பாறைக்குளம் வெயில் உகந்த அம்மன் கதையைப் பார்ப்போம்.
17. என்ன கதை?
கடும் கோடை காலத்தின் ஒரு நாள் திருப்பரங்குன்றத்திற்கு அருகில் கண்மாயில் நீண்ட தொலைவு நடந்து களைப்புற்ற ஒரு சிறுமி, ஓடையில் நீரள்ளிப் பருகிக் கொண்டிருந்தாள். அந்தச் சிறுமியை அந்தப் பகுதியில் பார்த்த தில்லையே என்று எண்ணிய சிலர், விசாரித்தனர்.\”ம்…வெயிலுக்கு அமர்ந் திருக்கேன். கொஞ்ச நேரத்தில கிளம்பிருவேன்\” என்று சொன்னாள்.நீண்ட நேரம் கழித்து, அவர்கள் பார்த்தபோது சிறுமி அமர்ந்திருந்த இடத்தில், எட்டு கரங்களுடன், வலது காலினை மடித்து ஆவேசத் திருக்கோலத்தில் அமர்ந் திருந்தாள் தேவி.
ஓடிச் சென்று ஊரில் தெரிவித்தனர். மக்கள் வந்து பார்த்தபோது அந்த அன்னையைக் காணவில்லை.அந்தச் சிறுமி அமர்ந்திருந்த இடத்தில் சிறு கல்லை நட்டு வழிபாடு செய்யத் தொடங்கினர். வெயிலுக்காக வந்து அமர்ந்ததால், அவளை ‘வெயிலுகந்த அம்மன்’ என்று அழைத்தனர். கருவறையில் இருக்கும் அம்மனின் சிரசில் தினமும் மதியம் 12 மணி முதல் 12.15 வரை வெயில் விழுகிறது. கடுமையான வெயிலைத் தாங்கிக்கொண்டு அம்மன், மக்களுக்குக் குளுமையை வழங்குவதாக ஐதிகம். அதனால், வெயிலினால் உண்டாகும் நோய்கள் தீர இங்கே மக்கள் நேர்ந்து கொள்கிறார்கள்.
18. கொப்புடை நாயகி அம்மன்
காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில் என்பது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள அம்மன் கோயில் .. இத்தலத்தின் மூல வராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அமைக்கப்பட்டுள்ளார். இத்தலமானது பழமை வாய்ந்தது. காரைக்குடியின் புறநகரப் பகுதியாக தற்போது இருக்கும் செஞ்சை என்ற இடம் முன்பு காட்டுப்பகுதியாக இருந்தது. இந்த செஞ்சை காட்டுப்பகுதியில் காட்டம்மன் கோயில் உள்ளது.
காட்டம்மனும் கொப்புடையம்மனும் சகோதரிகள் ஆவர். காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன். கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை எனவும் காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தன் மூத்த தமக்கையின் பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந் தைகளுக்குக் கொடுக்க எடுத்து வருவாரென்றும் காட்டம்மன் மலடியான தன் தங்கை தன்னுடைய பிள்ளைகளைப் பார்க்கக் கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாரென்றும் கூறப்படுகிறது. இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளைக் கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்றும் இக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
19. செவ்வாய்த் தேர்
அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் ஆகும். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறார்.தோல் நோய்கள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் இங்கு வருகிறார்கள்.
உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை ‘செவ்வாய்ப் பெருந்திருவிழா’ தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய்க் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய்க் கிழமையும், ஐந்து செவ்வாய்க் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய்க் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.
20. கண்ணாத்தாள் கோயில்
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன் கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக்கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.குழந்தை இல்லாதவர்கள் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள்.
அம்மனின் அருளால் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கிறது. கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள். அங்கே கோடைத் திருவிழாவாக வைகாசி மாதம் 10 நாட்கள் பெருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அபிஷேகம், அம்மன் வீதி உலா என்று கோலாகலமாக இருக்கும். எட்டாம் நாள் வெள்ளித்தேர் பிரசித்தி. இத்திருவிழாவுக்கு சென்று வருபவர்கள் பலாப் பழம், பனை ஓலைப்பெட்டி போன்ற பொருள்களை வாங்கி வருவர்.
21. கல் இடறியது, பால் குடம் தவறியது
இவ்வூருக்கு தெற்கே அமைந்திருக்கும் கிராமம் பிரண்ட குளம். இதன் வழியாக, ஒரு யாதவன், பால் எடுத்து வரும் போது, நாட்டரசன் கோட்டைக்கு அருகில் வருகையில் ஒரு கல் இடறியதால், பால் குடம் தவறி, பால் முழுவதும் கழனியில் கலந்தது. பல நாட்கள் இது தொடர்ந்தது. அவனுக்கு மட்டுமல்லாமல், பலருக்கும் இது நடந்தது. இதுபற்றி சிந்தித்த யாதவர்கள், ஒரு நாள், பால் குடம் கொண்டு வரும்போது, நினைவாக, அந்தக் குறிப்பிட்ட கல் இடறும் முன்பே, மண்வெட்டி கொண்டு அந்த இடத்தை வெட்டினர்.
பீறிட்டடித்தது குருதி வெள்ளம். செய்தியறிந்து, அந்த இடத்திலிருந்து கல்லை, முழுவதுமாக வெளியே எடுக்க வெளிப்பட்டது கல்லல்ல. கல் உருவில், கருணை உருவான அம்மன், கண்ணுடையாளாக வெளிப்பட்டாள். அந்த நேரத்தில் ஒருவருக்கு அருளாவேசம் வந்து, அவர் மூலமாக ‘நான் கண் கொடுக்கும் தெய்வமாக இருப்பேன்!’ என்று அம்மன் வாக்களித்தாள்.. இன்றளவும் அவ் வண்ணமே, பக்தர்களின் விழிமலர்களைக் காத்து வருகிறாள் கண்ணாத்தாள்..அங்கிருந்து எடுத்து வரப்பட்டு, அன்னை முதலில் சிவன் கோயிலிலேயே வைக்கப்பட்டாள். மறுநாள் அன்னை, வடக்கு நோக்கித் திரும்பியிருக்கக் கண்டு, இதுவே அவள் திருவுளம் என்று, தனிக் கோயிலில் வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார்கள்.
22. சோழ வந்தான் ஜனக மாரியம்மன்
ஜனக மாரியம்மன் கோயில், மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில். இக்கோயில் கருவறையில் சந்தன மாரியம்மன் நின்ற நிலையிலும், ஜனக மாரியம்மன் அமர்ந்த நிலையிலும் காட்சியளிக்கிறார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
ஜெனகை மாரியம்மன் குடிகொண்டுள்ள இந்த ஊர் இராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் ஜெனகபுரம் என்று முன்னர் அழைக்கப்பட்டது. மேலும், மாரியம்மனுக்கு ஜெனகை மாரியம்மன் எனப்பெயர் சூட்டப்பட்டது. இக்கோயில் தல விருட்சம் வேப்பமரம் மற்றும் அரசமரம் ஆகும்.ஆண்டுதோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவம் திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான்று தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னிசட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக் கடன்கள் பக்தர்கள் செலுத்துவர். 17ஆம் நாள் இரவு 7 மணி முதல் விடிய விடிய வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
23. ஸ்ரீ பூலூரு அம்மன்
வெயிலில் ஏற்படும் நோயிலிருந்து காப்பாற்றும் அம்மன் கோயில்கள் பல உண்டு. அதில் வெயில், மழை இரண்டையும் தன்னுடைய திருமேனியில் தாங்கிக் கொண்டு மேற்கூரை இல்லாமல் காட்சி அளிக்கும் வெயில் உகந்த அம்மன் கோயில்களும் சில உண்டு. அதில் ஒன்றுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஸ்ரீபூலூரு அம்மன் கோயில். தனிக்கோயிலில் சாமுண்டியுடன் மேற்கூரை இல்லாத தனி சந்நிதி ஒன்றில் தன் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
800 வருடங்களுக்கு முன்புகன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட வணிகர் ஒருவர் தென்காசி பக்கம் வியாபாரத்துக்குப் போயிருந்தபோது அற்புதக் காட்சி ஒன்றைக் கண்டார். ஒரு சின்னப் பெண் காலில் கொலுசு ஒலிக்க அக்னியிலிருந்து தோன்றி வெளியே வருவதைக் கண்டாள். அவளைத் தொழுது அருள்பெற்ற வணிகர், அந்த தெய்வத்தையே குலதெய்வமாகக் கொண்டார். அவளே பூலூரு அம்மன் என்கிறார்கள். அவள் சௌடம்மனுக்கு அக்கா முறை என்கிறார்கள். அதன்பின் அந்த வணிகர் இனமக்களுக்கு பூலூரு அம்மனே குல தெய்வமானாள்.மிகுந்த வரப்பிரசாதி.
24. வடக்கேயும் வெயில் உகந்த அம்மன்
தென்னகத்தைப் போலவே வடக்கே ஹிமாச்சலப் பிரதேசத்திலும் வெயில் உகந்த, மேற்கூரை இல்லாத ஒரு அற்புத அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. இப்பகுதி மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள் . இந்தக் கோயிலுக்கு ஷிகாரி தேவி கோயில் என்று பெயர். இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள கர்சோக் ஜன்ஜெஹ்லி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு பழமையான கோயில்.
இது ஜாஞ் சேலியிலிருந்து 18 கிமீ தொலைவிலும், மண்டியிலிருந்து 94 கிமீ தொலைவிலும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வேட்டையாடுபவர்களின் தெய்வமான ஷிகாரி தேவி விளங்குகின்றாள்.இந்தக் கோயிலுக்கு மேல் கூரை இல்லை. கடந்த காலங்களில் இந்தக் கோயிலின் மேல் கூரை கட்ட பல முயற்சிகள் மேற் கொள்ளப் பட்டன, ஆனால் ஒவ்வொரு முறையும் முயற்சி தோல்வியடைந்தது. கோயிலின் மேல் கூரை நிற்க முடியவில்லை. இன்றும் கூட, ஷிகாரி தேவி கோயில் கூரை இல்லாமல் உள்ளது.
25. கூரையில்லாமல் அருளும் வெக்காளியம்மன்
திருச்சி உறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்ரீ வெக்காளியம்மன் . வெம்மை உகந்த காளி என்பதால் வெக்காளி அம்மன். கோடையையும் மழையையும் சமமாகக் கருதித் தாங்கும் இவளுக்குக் கருவறையின் மேலே விமானம் இல்லை. திறந்த வெளியிலே காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றாள் .12 மாதங்களும் திருவிழா நடக்கும் திருக்கோயிலில், கோடைகாலமான சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருவிழாவும், வைகாசி கடைசி வெள்ளியில் மாம்பழ அபிஷேகமும், ஆனி மாதத்தில் காய்கறி அலங்கார விழாவும் நடைபெறுவது விசேஷம். இங்கே ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். பௌர்ணமி பூஜை இங்கு சிறப்பானது.
26. கரிவலம்வந்தநல்லூர் வெயில் உகந்த அம்மன்
ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் 26 கி.மீ., தூரத்தில் உள்ளது. கரிவலம் வந்தநல்லூர். இங்கு அருள் தருபவள் வெயில் உகந்த அம்மன். வெயில் உகந்த அம்மன் என்பதை ‘வேலுகந்த அம்மன்’ என்றும் சொல்வார்கள். வேலுகந்த அம்மன் வெயிலுகந்த அம்மனாக திரிந்தது என்பர்.கரிவலம் வந்த நல்லூர் ஒரு காலத்தில் ‘கருவை’ என அழைக்கப் பட்டது. இவ்வூரை ஆட்சி செய்த வீரபாண்டியனுக்கு வரதுங்க ராம பாண்டியன், அதிவீர பாண்டியன் என்று இரண்டு புதல்வர்கள்.
அப்போது, தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கு புத்திரர்கள் இல்லை. எனவே, தனக்கு ஒரு புத்திரனை சுவீகாரம் செய்து தர வீரபாண்டியனுக்கு கோரிக்கை வைத்தான். வீரபாண்டியனும் தன் இளையமகனை சுவீகாரம் கொடுத்து விட்டான். பின் வரதுங்கன் ஆட்சிப் பொறுப்பேற்றான்.
அவனுக்கு சிவகாமசுந்தரி என்ற துணைவி. அவளுக்கு குழந்தைகள் இல்லை. எனவே அடுத்தடுத்து 27 பெண்களைத் திருமணம் செய்தான். ஆனாலும், புத்திர பாக்கியம் இல்லை. எனவே, கரிவலம்வந்த நல்லூரிலுள்ள பால்வண்ணநாதருக்கு பல பூஜைகள் செய்தான். அடுத்த பிறவி யிலேனும் தனக்கு அந்த பாக்கியம் வேண்டுமென அவன், அவ்வூரிலுள்ள வெயிலுகந்த அம்பாளிடமும் வேண்டுகோள் வைத்தான். அவளும் நிறை வேற்றித் தருவதாக வாக்களித்தாள். வெயிலுகந்த அம்மனிடம் நமது கோரிக் கைகள் எதுவானாலும் வைக்கலாம். அத்தனையும் நிறைவேற்றித்தருவாள்.
27. திருச்செந்தூர் வெயில் உகந்த அம்மன்
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு வரகுணபாண்டியன் என்னும் மன்னன் குழந்தை பாக்யம் இல்லாமல், திருச்செந்தூர் முருகன் கோயில் வந்து கந்தசஷ்டி விரதம் இருந்தான். ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் முகம் குதிரையின் முகமாகவும், உடல் மனித உருவிலும் இருந்தது கண்டு கவலை அடைந்தான். வெயில் உகந்த அம்மனை வணங்கினால் குறை தீரும் என்று அறிந்து, இவ்விடம் வந்து கடும் விரதம் மேற்கொண்டான். வெயிலுகந்தம்மன் ஆடி செவ்வாய்க் கிழமை, கடலில் இறங்கி குழந்தையோடு தீர்த்தமாடினால் குழந்தை சுய உருவம் பெறுவாள் என்று அருள்வாக்கு தந்தாள். அப்படியே நடந்தது. குழந்தையின் குதிரை முகத்தைத் தான் ஏற்றுக் கொண்டாள்.
குழந்தையின் முகம் (வதனம்) மாறிய இடம் என்பதால் அந்த இடம் வதனாரம்ப தீர்த்தம் என்கிறார்கள். அன்னையின் கருணையை எண்ணி வியந்த மன்னன் அன்னைக்குக் கோயில் கட்டி சிறப்பித்தான். ஆடிச்செவ்வாய், பெண்கள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி, கால்களில் நலுங்கு மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை கொண்டு அன்னையை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர விருத்தியும் ஏற்படும்.
28. கொங்கு நாச்சி அம்மன்
பிள்ளையாருக்கு பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டியில், கிராம தேவதையான கொங்கு நாச்சி அம்மன் கோயில் திருவிழா பத்து நாள் விமர்சையாக நடைபெறும், வைகாசி மாதம் நடைபெறும் இத்திருவிழாவில் அம்பாள் பிள்ளையார் திருவீதியே வலம் வரும், ஒன்பதாம் திருநாளில் அம்பாள் தேரில் ஸ்ரீ கொங்கு நாச்சி அம்மன் கோயிலுக்குச் சென்று மறுநாள் இரவு பிள்ளையார் சன்னதியில் பூப்பல்லக்கு நடைபெறும். திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில், கோடை கால உற்சவங்களான சித்திரை-வசந்த மகோற்சவம் பதினாறு தினங்களும். வைகாசி-விசாகத் திருவிழா ஒருநாளும் நடைபெறும்.
29. வெயில் காலமும் பூக்குழியும்
அம்மன் கோயில்களில் நடக்கும் விழாக்களில் பால் குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், கரகம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் ஆகியவற்றைப் போல் பூக்குழி இறங்குதல் என்னும் நேர்த்திக்கடன் காலம் காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அருள் வந்து ஆடி வரும் பக்தர்களுக்கு தீ மிதித்தல் முக்கியமான நிகழ்ச்சி. இதனை மென்மையாக பூக்குழி என்பார்கள். அம்மன் அருளால் தீயே பூவாக மாறும்.
வெப்பம் குளிர்ச்சியாய் மாறும். பக்தர்கள் வெயிலின் தாக்கம் இருக்கும் போதும், உச்சி வெயிலிலும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். காப்புக் கட்டியோ அல்லது மாலை அணிந்தோ கடுமையாக விரதம் இருந்த பக்தர்கள், நீர் நிலைகளில் நீராடி, அருள் வந்து ஆடியபடி, பூக்குழியை சுற்றி வந்து வணங்கி விட்டு, வரிசையாக நின்று பூக்குழிக்குள் இறங்கி, நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். அம்மன் அருளால் எந்தவிதக் கஷ்டங்களையும் எளிதாக எதிர்கொள்ளும் வைராக்கியத்தை இது தருகிறது.
30. நிறைவுரை
நம்முடைய தென்னகத்தில் இப்படி எண்ணற்ற அம்மன் கோயில்கள் உண்டு. இந்த அம்மன் கோயில்களில் பெரும்பாலும் கோடை விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கோடையில் இளைப்பாறும் குளிர் தருக்கள்தான் இந்தக் கோடை விழாக்கள். வெயில் (கோடை) உகந்த அம்மனாக இந்த அம்மன் கோயில்களும் திருவிழாக்களும் அமைந்து, நம்முடைய வாழ்வியல் துன்பங்களாகிய வெப்பத்தைத் தீர்த்து குளிர்ச்சியாகிய அருளைத் தருகின்றன.
எஸ். கோகுலாச்சாரி
The post வெற்றியைத் தரும் வெயில் உகந்த தெய்வங்கள் appeared first on Dinakaran.