
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 38 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39வது லீக் ஆட்டத்தில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. இரு தோல்வி கூட (பஞ்சாப், லக்னோவுக்கு எதிராக) நெருங்கி வந்து தான் தோற்றது.
அதேவேளையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங், பந்து வீச்சு சீராக இல்லை. ஒன்றில் வெற்றி பெற்றால் அடுத்த ஆட்டத்தில் உடனே தோற்று விடுகிறார்கள். இதுவரை அப்படி தான் நடந்துள்ளது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்புடன் குஜராத்தும், வெற்றிப்பாதைக்கு திரும்ப கொல்கத்தாவும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.