அருணாசலபிரதேசத்தில் சீனாவின் தலையீடு

5 hours ago 4

இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. அதில் வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசமும் ஒன்று. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 3,488 கிலோ மீட்டர் நீளத்தில் எல்லை இருக்கிறது. இந்த எல்லை ஜம்மு-காஷ்மீர், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொட்டுக்கொண்டு செல்கிறது. இவ்வாறு எல்லையோர மாநிலமாக இருக்கும் அருணாசலபிரதேசம் 1957-ல் வடகிழக்கு எல்லை குழுமமாகத்தான் உருவாக்கப்பட்டது. அப்போதில் இருந்து 1960-ம் ஆண்டு வரை இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையே உறவு மிகவும் சுமுகமாக இருந்தது. அதற்கு பின் ஏற்பட்ட எல்லை தகராறு காரணமாக 1962-ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் மூண்டது. இந்த போரில் அருணாசலபிரதேசத்தில் பெரும் பகுதிகளை சீனா கைப்பற்றிக்கொண்டது.

இந்த வடகிழக்கு எல்லை குழுமம் உதயசூரியன் பூமி என்று அழைக்கப்படுகிறது. இதன் வடக்கு பகுதியில் சீனாவும், இந்தியாவில் உள்ள அசாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்கள் மேற்கு பகுதியிலும், மியான்மர் தென் கிழக்கிலும், பூடான் மேற்கு பகுதியிலும் இருக்கிறது. இது 1972-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந்தேதி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, பின்பு 1987-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந்தேதி அருணாசலபிரதேசம் என்ற மாநிலமாக இந்தியாவால் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் தலைநகர் இட்டாநகராகும். இந்த மாநிலத்தில் இப்போது 28 மாவட்டங்கள் இருக்கின்றன. இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3 முறை பா.ஜ.க.வே வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

2024-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 46 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றதால் இந்த மாநிலத்தில் சுத்தமாக துடைத்து போடப்பட்டுவிட்டது. சீனா, அருணாசலபிரதேசத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி அதன் பெயரை சாங்னன் என்றே அழைத்து வருகிறது. மேலும் அருணாசலபிரதேசம் தங்களுக்கு சொந்தமான மேற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சொந்தம் கொண்டாடி வருகிறது.

இப்போது திடீரென்று அருணாசலபிரதேசத்தில் உள்ள 15 மலைகள், 4 கணவாய்கள், 2 நதிகள், ஒரு ஏரி மற்றும் 5 மக்கள் வாழும் பகுதிகள் என்று 27 இடங்களுக்கு தங்களது பெயர்களை சூட்டி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவ்வாறு அருணாசலபிரதேச பகுதிகளுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 5-வது தடவையாகும். இதற்கு முன்பு 2017, 2021, 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் இதுபோல அருணாசலபிரதேசத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சீனா பெயர்களை அறிவித்தது.

2017-ல் தலாய்லாமா அருணாசலபிரதேசத்துக்கு வந்தபோது இப்படி பெயர்களை சூட்டி சீனா தனது தலையீட்டை தொடங்கியது. இதுபோல 2023-ல் ஜி-20 மாநாட்டை அங்கு இந்தியா நடத்தியபோதும் இதுபோன்ற எல்லை மீறிய செயல்களை சீனா செய்தது. இந்தியா இந்த செயலை ஒரு கேலிக்கூத்தாக கருதுகிறது. இவ்வாறு சீனா தனது பெயர்களை சூட்டுவதாலேயே அருணாசலபிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதி என்ற மறுக்க முடியாத உண்மை ஒருபோதும் மாறிவிடாது. அருணாசலபிரதேசம் இப்போதும், எப்போதும் நம் நாட்டின் ஒரு பகுதி என்பதுதான் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. எனினும் இந்தியா சீனா விஷயத்தில் மிக, மிக கவனமாக இருக்க வேண்டும்.

Read Entire Article