
திருவனந்தபுரம்,
வங்கிக் கடன் குறித்து கேரளா காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு, பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக, நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பா.ஜ.க.விடம் ஒப்படைத்ததாகவும், இதன் காரணமாக வங்கியில் அவர் வாங்கிய 18 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கேரள காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிலளித்துள்ள நடிகை பிரீத்தி ஜிந்தா, தனது சமூக வலைதள பக்கங்களை, தான் மட்டுமே கையாண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளார். தனது கடனை யாரும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கடனை முழுமையாக செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி அவதூறு பரப்புவது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள பிரீத்தி ஜிந்தா, இதுபோன்று போலி செய்திகளை காங்கிரஸ் பரப்புவது வெட்கக் கேடான செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.