ஒடிசா: டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.14 லட்சத்தை இழந்த பல்கலைக்கழக துணைவேந்தர்

2 hours ago 1

புவனேஸ்வர்,

இணைய வழி மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ, வீடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதனை நம்பி பயந்து போனவர்கள், மோசடி கும்பலிடம் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒடிசாவில் உள்ள பெர்காம்பூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாஞ்சலிக்கு கடந்த 12-ந்தேதி ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தன்னை அமலாக்கத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார்.

கீதாஞ்சலியின் பெயரில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக கீதாஞ்சலியை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளதாகவும் கூறி மிரட்டியுள்ளார். மேலும் அவரை உடனடியாக விடுவிக்க ரூ.14 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய கீதாஞ்சலி, ரூ.14 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பிறகுதான் இது ஒரு மோசடி செயல் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக போலீசாரிடம் கீதாஞ்சலி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பெர்காம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article