
சென்னை,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
முதல் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக வெற்றி பெற்ற பின் தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சென்னை கடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி வெற்றி பெற்றது. சென்னை தொடர் தோல்வியை சந்திக்க பேட்டிங் முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் குறிப்பாக திரிபாதி, விஜய் சங்கர் போன்றவர்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் இருவரையும் பிளேயிங் லெவனில் எடுக்க கூடாது என கருத்துகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சி.எஸ்.கே வெற்றி பெற்ற பின்னர் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சி.எஸ்.கே அணியை வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த பதிவை டேக் செய்த ரசிகர் ஒருவர் சி.எஸ்.கே அணிக்கு விஜய் சங்கர் தேவையா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதில் அளித்துள்ள ஸ்ரீகாந்த், ஆம். வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொடுக்க விஜய் சங்கர் தேவை என்று கிண்டலாக பதிலளித்திருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.