
மும்பை,
மும்பையில் செயல்படும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து ஒரு கும்பல் போலி கிரெடிட் கார்டுகளை தயாரித்து பணமோசடி செய்து வருவதாக ஆசாத் மைதான் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் அசாம் மாநிலம் மோரிகாவ் பகுதியில் செயல்பட்டு வருவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அசாம் மாநிலம் சென்று மோசடி கும்பலை சேர்ந்த மொகேபூர் ரகுமான், அசாரூல் இஸ்லாம், இலியாஸ் இஸ்லாம், அபுபக்கர் சித்திக், மொயினுதீன் அகமது ஆகிய 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 55 போலி கிரெடிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அதிக சிபில் ஸ்கோர் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு கிரெடிட் கார்டு வழங்குவதாக கூறி வாக்குறுதி அளித்து உள்ளனர். பின்னர், அவர்களிடம் இருந்து சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பெற்று அவர்களது பெயரில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து அதன் மூலம் ரூ.1 கோடியே 26 லட்சம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.