
திருப்பூர்,
திருப்பூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் ராமசாமி. இவர் அதே பகுதியில் பனியன் துணிகள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் இருந்து தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சோ்ந்த பிரவீன் குமார், கல்பனா தம்பதியினர் ரூ.1 கோடியே 45 லட்சத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் துணிகள் கொள்முதல் செய்துள்ளனர்.
ஆனால் அந்த பணத்தை தராமல் ஏமாற்றி வந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மகேஷ் ராமசாமி ஐதராபாத் தம்பதி மீது திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்த தம்பதியினர் தலைமறைவானார்கள்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் தெலுங்கானா சென்று தேடிவந்தனர். அப்போது ஐதராபாத்தில் தங்கியிருந்த தம்பதியை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.