
விவசாயத்தைப் பற்றி பொதுவாக ஒரு வழக்கு மொழி உண்டு. அது விளைச்சல் இருந்தால் விலையில்லை, விலையிருந்தால் விளைச்சல் இல்லை என்பதாகும். விவசாய செலவுகளுக்கு இப்போது அதிக பணம் தேவைப்படுகிறது. விதைப்புக்கு முன்பு நிலத்தை பண்படுத்த தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கும் செலவு விதைப்பு, களையெடுத்தல், பூச்சி மருந்து, பயிர்களை பராமரித்தல், அறுவடை என்று செலவு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவ்வளவு செலவு, மனித உழைப்புக்கும் பிறகு அதில் இருந்து வருமானம் கிடைக்கிறதா? என்றால் அதுதான் இல்லை. இந்த பரிதாபகரமான நிலை விவசாயிகளுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கிறது. அனைத்து விளை பொருட்களுக்கும் குறிப்பாக பழங்கள், காய்கறிகளின் விலை மிகவும் கீழே போய்விட்டால் விவசாயிகள் விற்க முடியாமல் சாலையில் போட்டுவிடும் அவலநிலை இருக்கிறது.
காஷ்மீர் என்றாலே ஆப்பிள்தான் எல்லோருடைய நினைவுக்கும் வரும். காஷ்மீர் ஆப்பிளுக்கு என்று தனி சுவை உண்டு. ஆனால் காஷ்மீர் ஆப்பிளுக்கு உரிய விலை கிடைக்காமல் விற்பனையும் ஆகாமல் அழுகிப்போய் விட்டதால் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் டன் ஆப்பிள் அழுகிப்போய் சாலையில் வீசப்படுகிறது. இதுபோல தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மாம்பழங்கள் விற்பனையாகாமல் சாலையில் வீசப்பட்டது குறித்து 'தினத்தந்தி'யில் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மீன்களுக்காவது உணவாகட்டுமே என்ற நோக்கத்தில் ஏரிகளில் மாம்பழங்கள் கொட்டப்பட்டது. தக்காளிக்கு இப்போது நல்ல விலை இருந்தாலும் சில நாட்களுக்கு முன்பு மிக குறைந்தவிலை இருந்ததால் கட்டுப்படியான விலை இல்லை, அதனால் தக்காளியும் சாலையில் வீசப்பட்டது.
மாம்பழமும், தக்காளியும் பறிப்பதற்கான கூலி, சந்தைக்கு கொண்டுபோக போக்குவரத்து கூலி ஆகியவற்றை சமாளிப்பதற்குக்கூட விற்பனை விலை இல்லை என்பதால் பல இடங்களில் பறிக்காமல் அப்படியே விட்டு அழுகி கீழே விழவைத்து விட்டார்கள். இப்போது முள்ளங்கி கூட கிலோ ரூ.5-க்கு போவதால் விலை கட்டுப்படியாக வில்லை. இதுபோன்ற நிலையை தவிர்க்க உள்ளூரில் விலை போகாவிட்டாலும் தேவையுள்ள மற்ற ஊர்களிலும், மாநிலங்களிலும் விற்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காஷ்மீர்-கன்னியாகுமரி வந்தே பாரத் சரக்கு ரெயிலை உடனடியாக விட்டால் காஷ்மீரில் புறப்படும் இந்த ரெயில் அங்கு இருந்து ஆப்பிள் பழங்களை ஏற்றிக்கொண்டு வழிநெடுக இறக்க முடியும். வழியில் உள்ள மாநிலங்களிலும் அங்கு உள்ள பொருட்களை ஏற்றிக்கொண்டு வர முடியும்.
அதுபோல கன்னியாகுமரிக்கு வந்து திரும்ப புறப்பட்டு செல்லும்போது தமிழ்நாட்டில் இருந்து மீன்கள், கருவாடு, காய்கறிகள், பழங்கள் போன்ற விளை பொருட்களையும் மட்டுமல்லாமல் இங்கு தயாரிக்கப்படும் மற்ற உற்பத்தி பொருட்களையும் இந்த ரெயிலில் மற்ற இடங்களுக்கும் அனுப்பமுடியும். அங்கு இருந்து கொண்டு வரவும் முடியும். எனவே வர்த்தகம் தழைக்க இந்த ரெயிலை உடனே விட வேண்டும். மேலும் அழுகும் பொருட்களை நீண்ட நாட்கள் வைக்க அரசு மற்றும் தனியார் சார்பில் குளிர்சாதன கிடங்குகளையும் ஆங்காங்கே தொடங்க வேண்டும். மேலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் தொடங்கினால் எந்த பொருளும் வீணாகும் நிலையோ, அழுகும் நிலையோ ஏற்படாது. எடுத்துக்காட்டாக மாம்பழ ஜூஸ், தக்காளி ஜூஸ், ஊறுகாய், சாஸ் போன்ற பல பொருட்களை அனைத்து காய்கறிகள், பழங்களில் இருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநிலம் முழுவதும் அவை விளையும் இடங்களில் தொடங்க வேண்டும்.