
சென்னை,
அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கடந்த 2012-ம் ஆண்டுமுதல் பணியாற்றி வருகின்றனர். வாரத்தில் 3 நாட்கள் பணிபுரியும் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.12,500 வழங்கப்படுகிறது.அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், திமுக 2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றது முதல், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் காலவரையற்ற போராட்டம் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் அருகே கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இப்போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்தது. இந்தநிலையில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் கையில் பதாகைகளை ஏந்தி முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவர்கள் கூட்டமாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் உடனடியாக அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று அருகே நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.