வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லையா..? - பேராசிரியர்கள் மீது பரபரப்பு புகார்

6 days ago 5


நெல்லை பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இறுதியாண்டு பயிலும் மாணவிகளுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் என்று மனு எழுதி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர், மாவட்ட கலெக்டர், அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பான அந்த மனுவில், "சித்த மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் இணைந்து கடந்த 2 ஆண்டுகளாக இறுதியாண்டு படிக்கும் மாணவிகளின் செல்போன் எண்களை வாங்கி வைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். செல்போனில் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்கள். தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில் கல்லூரிக்கு அருகே ஒரு வீட்டில் வகுப்பு எடுப்பது போல் பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். 2 பேராசிரியர்களையும் இடமாறுதல் செய்தால் மட்டுமே மாணவிகள் நிம்மதியாக கல்வி பயில முடியும். இந்த பேராசிரியர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்றுங்கள்" என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுசம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், "இறுதியாண்டு மாணவிகளின் பெயரில் புகார் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், எந்த மாணவிகளும் தங்களுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்றும், தங்கள் கல்லூரி பெயரை கெடுப்பதற்காக இப்படி புகார் எழுதியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மாணவிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்படி தவறு இருந்தால், அந்த புகாரின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

Read Entire Article