வீட்டின் வெளியே விளையாடியபோது ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்: மப்பேட்டில் பரபரப்பு

7 hours ago 3

திருவள்ளூர், ஜூலை 6: திருவள்ளூர் அடுத்து மப்பேட்டில் வீட்டின் வெளியே விளையாடியபோது, ராட்வீலர் நாய் கடித்து குதறியதில் 7 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் லலித்குமார் – துர்கா பிரியா தம்பதி. இவர்களின் 2வது மகள் சந்திரிகா (6) அங்குள்ள, அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சந்திரிகா, பள்ளிக்குச்சென்று மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, துர்கா பிரியா தனது கைக்குழந்தை மற்றும் 2வது மகளான சந்திரிகாவை தனது தோழி பிரியா என்பவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, வீட்டின் வெளியே பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சிறுமி சந்திரிகா, அந்த வீட்டின் அருகே ராட்வீலர் என்ற நாய் கட்டி வைத்திருந்த பகுதிக்குச்சென்று விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி சந்திரிகா, நாய் மீது சிறிய கல்லை தூக்கி எறிந்துள்ளார்.
இதனால், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய், கயிற்றை அறுத்துக்கொண்டு வந்து சிறுமி சந்திரிகாவை பாய்ந்து கடிக்க துரத்தியது. இதனால், தாய் துர்கா பிரியா தனது மகளை தூக்கிக்கொண்டு, பிரியா வீட்டிற்குள் ஓடி மறைந்துள்ளார். பிரியா நாயை இறுக்கமாக பிடித்தும், நாய் கயிறை உருவிக்கொண்டு வீட்டில் பதுங்கி இருந்த சிறுமியை கடித்து குதறியுள்ளது.

சிறுமியை நாய் கடித்து குதறுவதைக் கண்ட தாய், கத்தி கூச்சலிடவே அருகில் இருந்து ஓடிவந்த இளைஞர் ஒருவர், நாயை நோக்கி இரும்பு ராடை கொண்டு அடிக்க முயன்றபோது நாய் சிறுமியை விட்டு விலகி ஓடியது. பிறகு அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு வயிறு, கை, கால் பகுதியில் தையல் போடப்பட்டு, சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை, ராட்வீலர் நாய் கடித்துக்குதறிய சம்பவம் மப்பேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராட்வீலர் இன நாய்கள் மிக பயங்கரமான நாய் என்பதால், அத்தகைய நாய்களை இறக்குமதி செய்யவும், விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும், இந்திய அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதையும் மீறி சிலர் விற்பனை செய்வதும், அத்தகைய நாயை வளர்த்தும் வருகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீட்டின் வெளியே விளையாடியபோது ராட்வீலர் நாய் கடித்ததில் 7 வயது சிறுமி படுகாயம்: மப்பேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article