*வரும் 21ம் தேதி நடக்கிறது
பெங்களூரு : மாநிலத்தின் தாவணகெரே மாவட்டத்தில் இம்மாதம் 21 மற்றும் 2 ஆகிய இரு நாட்கள் வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது.வீரசைவ லிங்காயத்து வகுப்பினரின் மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிகள் தொடர்பாக கர்நாடக மாநிலம் மட்டுமில்லாமல், நாட்டில் பல மாநிலங்களில் வாழும் வீரசைவ லிங்காயத்து வகுப்பினரை ஒன்றிணைக்கும் முயற்சியாக அகில இந்திய வீரசைவ மகாசபை தொடங்கப்பட்டது.
இதில் வீரசைவ லிங்காயத்து மடங்களில் மடாதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், சமூகத்தில் பல உயர் நிலையில் இருப்பவர்கள் இணைந்துள்ளனர்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தாவணகெரே மாவட்டத்தில், வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் பங்கேற்ற மாநாடு நடத்தப்பட்டது. இடையில் கடந்த 15 ஆண்டுகளாக மடாதிபதிகள் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, மடாதிபதிகள் யாரும் ஒன்றிணையாமல் இருந்தனர். இதனால் சமூகத்தின் மேம்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டது.
அதை தவிர்த்து, அனைத்து மடாதிபதிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை மூத்த சட்டப்பேரவை உறுப்பினரும் அகில இந்திய வீரசைவ மகாசபையின் தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பா மேற்கொண்டார்.
அதன் தொடர்பாக பெங்களூருவில் உள்ள சமானூர் சிவசங்கரப்பா வீட்டில் நேற்று 5 பெரிய வீரசைவ லிங்காயத்து மடங்களின் மடாதிபதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் மாநாட்டை இம்மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தாவணகெரே மாநகரில் உள்ள ரேணுகா கோயில் வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டில் கர்நாடக மாநிலத்தில் 16 மாவட்டங்களில் உள்ள வீரசைவ லிங்காயத்து மடங்களின் மடாதிபதிகள் உள்பட நாடு முழுவதில் இருந்து 700க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்கிறார்கள். மாநாட்டை அகில இந்திய வீரசைவ மகாசபையின் தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பா தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் மடாதிபதிகள், வீரசைவ லிங்காயத்து வகுப்பை சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள், ஆன்மீக சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், நீதித்துறையில் பணியாற்றுவோர், அனைத்து அரசியல் கட்சியில் உள்ள சமூகத்தினர் பங்கேற்கிறார்கள்.
The post கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு தாவணகெரேயில் வீரசைவ லிங்காயத்து மடாதிபதிகள் மாநாடு appeared first on Dinakaran.