சென்னை: ‘மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும். எனவே, தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது. சமூக நீதி அடிப்படையில், தமிழகத்திலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்று கூறி, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று இந்தியப் பிரதமருக்கு தான் எழுதியிருந்த கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.