நாக்பூர்: ரஞ்சி கோப்பை டெஸ்ட் காலிறுதி போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்றைய போட்டியில் விதர்பா அணியுடன் தமிழ்நாடு மோதவுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் தலா 4 நாட்கள் நடந்த நிலையில், காலிறுதி உள்ளிட்ட நாக் அவுட் சுற்று போட்டிகள் தலா 5 நாட்கள் கொண்டதாக இருக்கும். முதல் காலிறுதியில் ஜம்மு காஷ்மீர்-கேரளா அணிகள் மோதும் போட்டி புனேவில் நடக்கிறது. நாக்பூரில் நடக்கும் 2வது காலிறுதியில் விதர்பா-தமிழ்நாடு அணிகளும், கொல்கத்தாவில் நடக்கும் 3வது காலிறுதியில் அரியானா-மும்பை அணிகளும் களம் காண்கின்றன.
ராஜ்காட்டில் நடக்கும் 4வது காலிறுதியில் சவுராஷ்டிரா-குஜராத் அணிகள் விளையாடுகின்றன. ரஞ்சி கோப்பையை இதுவரை 2 முறை வென்றுள்ள தமிழ்நாடு அணி, சாய் கிஷோர் தலைமையில் களம் காண உள்ளது. இந்திய அணியில் இருந்த சாய் சுதர்சன் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். மணிமாறன் சித்தார்த்தும் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன் அஜித் ராம், ஆந்த்ரே சித்தார்த், நாரயண் ஜெகதீசன், முகமது அலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கலாம்.
அதே நேரத்தில் அக்சய் வட்கர் தலைமையிலான விதர்பா, வலுவானதாக மட்டுமின்றி தொடர் வெற்றிகளை குவித்து வரும் அணியாக உள்ளது. லீக் சுற்றில் அந்த அணி விளையாடிய 7 ஆட்டங்களில் 6 வெற்றி, ஒரு டிரா பெற்றிருப்பதே அதன் பலத்துக்கு சான்று. அதனால் இன்று தொடங்கும் காலிறுதி ஆட்டங்களில் விதர்பா-தமிழ்நாடு இடையிலான ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை எதிர்படுத்தி இருக்கிறது.
The post ரஞ்சி கோப்பை காலிறுதி: விதர்பா அணியுடன் மோதும் தமிழ்நாடு appeared first on Dinakaran.