விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு

2 weeks ago 3

ஜெயங்கொண்டம், நவ.5: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு 2024-25ஆம் ஆண்டில் ராபி மற்றும் சிறப்பு பருவங்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட்” என்ற நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் சிறப்பு பருவத்தில், நெல்.2 பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், ஆகிய 2 பிர்காக்களிலும்,மேலும் இத்திட்டத்தின்கீழ் ராபி பருவத்தில் உளுந்து மற்றும் நிலக்கடலை பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், ஆகிய 2 பிர்காக்களிலும் பயிர் காப்பீடு செய்துகொள்ளவும் அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2024-25ம் ஆண்டு சிறப்பு பருவத்தில் நெல் -2 மற்றும் மக்காச்சோளம் -2 பயிருக்கு நவம்பர் 15ம் தேதி வரையிலும் மற்றும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் 1 ஏக்கர் நெல்-2 பயிருக்கு ரூ.573-ம், 1 ஏக்கர் மக்காச்சோளம்-2 பயிருக்கு ரூ.345-ம் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் ராபி பருவத்தில் உளுந்து பயிருக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும், நிலக்கடலை பயிருக்கு 2025ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் 1 ஏக்கர் உளுந்து பயிருக்கு ரூ.231-ம், 1 ஏக்கர் நிலக்கடலை பயிருக்கு ரூ.379.5-ம் பிரீமியத் தொகையாக செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்துகொள்ளலாம்.

தற்போது சம்பா நெற்பயிர் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்று வரும் வேளையில் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்திடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பான விபரங்களுக்கு, ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

The post விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம்: வேளாண்மை உதவி இயக்குனர் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article