தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் (45). லாரி டிரைவர். இவரது மனைவி பத்ரகாளி (43). இந்த தம்பதிக்கு பிளஸ்2 படிக்கும் மகளும், 10ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். சங்கரன் லாரி வாங்கி தொழில் செய்வதற்காக தங்களுக்கு சொந்தமான வீட்டை அடகு வைத்து கடந்த 2020ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ரூ.5 லட்சம் கடன் பெற்றதோடு, இதற்காக மாதந்தோறும் ரூ.11 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு பிறகு லாரி அதிகம் ஓட்டம் இல்லாததால் அதையும் விற்றுள்ளார். இதனால் கடந்த சில மாதங்களாக தவணைத் தொகையை சங்கரன் செலுத்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடனை செலுத்துமாறு நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்ததுடன், வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிடுமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், தவணைத் தொகை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
அதன்பேரில் போலீசார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், வக்கீல்கள் நேற்று காலை வல்லநாட்டில் உள்ள சங்கரன் வீட்டை ஜப்தி செய்ய வந்தனர். வீட்டில் இருந்த சங்கரன் மற்றும் பத்ரகாளியை வலுக்கட்டாயமாக நிதி நிறுவனத்தினர் வெளியேற்றினர். வீட்டில் இருந்த பொருட்களை கூட வெளியே எடுத்துச் செல்ல கால அவகாசம் அளிக்காமல் வெளியே தள்ளி கதவை அடைப்பதில் போலீசார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள் குறியாக இருந்தனர். இதனால் விரக்தி அடைந்த சங்கரன் மற்றும் அவரது மனைவி பத்ரகாளி ஆகியோர் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தனர். ஆனால் போலீசார் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், தம்பதியினரை காப்பாற்ற முயலாமல் வீட்டை ஜப்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் சுமார் 45 நிமிடத்திற்கு பிறகே போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சங்கரன் உயிரிழந்தார். பத்ரகாளிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்த சங்கரன் உடல், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், வல்லநாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை கண்டித்தும், காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வல்லநாட்டில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post வீடு ஜப்தியால் லாரி டிரைவர் தற்கொலை; வல்லநாட்டில் இன்று கடைகள் அடைப்பு appeared first on Dinakaran.