செங்கல்பட்டு: சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து நேற்றிரவு நெல்லைக்கு சென்ற சூப்பர் பாஸ்ட் விரைவு ரயிலின் பார்சல் பெட்டியில் ஆள்நடமாட்டம் இருப்பதாக பயணிகள் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் அப்பெட்டியை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தி அரைமணி நேர சோதனை நடந்தது. இதனால், அதில் சென்ற ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்து நேற்றிரவு வழக்கம்போல் திருநெல்வேலி செல்லும் நெல்லை சூப்பர்பாஸ்ட் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் தாம்பரம் அருகே வந்தபோது, அந்த ரயிலின் பார்சல் பெட்டியில் ஆள்நடமாட்டம் இருப்பது போல் சத்தம் கேட்பதாக பயணிகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அப்பெட்டியை தாம்பரம் ரயில்வே போலீசார் சோதனை செய்வதற்குள் ரயில் கிளம்பி சென்றுவிட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் நின்றிருந்த நெல்லை விரைவு ரயிலின் பார்சல் பெட்டியில் சோதனையிட ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் விரைந்து சென்றனர். எனினும், சீல் வைக்கப்பட்ட அப்பெட்டியின் சாவி இல்லாததால், கதவை உடைத்து, சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், அந்த பார்சல் பெட்டியில் ஆள்நடமாட்டம் இல்லை. அனைத்து பார்சல்களும் உடைக்கப்படாமல் அப்படியே உள்ளது என ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இச்சோதனையால் நெல்லை விரைவு ரயில், செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் சுமார் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
The post செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் விரைவு ரயிலின் பார்சல் பெட்டியில் ஆள்நடமாட்டம்?: அரை மணி நேரம் சோதனை appeared first on Dinakaran.