கோவை: கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நவீன குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன், சொந்த வீடின்றி அவதிப்பட்டு வந்த சுமார் 115க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சி ஓராட்டுகுப்பை பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இங்கு வீடுகட்ட பணமின்றி அவதிப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து அவர்கள் அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம், தனியார் நிறுவன பங்களிப்புடன் குடியிருப்புகள் கட்டித்தர தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடம், வீட்டில் என்னென்ன வசதிகள் வேண்டும்? என்று கேட்டறிந்து கோவை தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுமார் தலா ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் ஓராட்டுகுப்பை பகுதியில் குடியிருப்புகள் கட்டும் பணி துவங்கியது. இப்பணிகள் தற்போது முடிந்துள்ளது.
தமிழகத்தில் முதன் முதலாக, மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இக்குடியிருப்பில், வீட்டிற்குள் செல்லும் வகையில் சாய்வு தரைதளம், வீட்டிற்குள்ளேயே பாத்ரூம், கழிப்பறை தண்ணீர் வசதி உள்ளது. மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இக்குடியிருப்பு திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதன் பிறகு இவ்வீடுகள் மாற்றுத்திறனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
The post தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன குடியிருப்பு: விரைவில் திறக்கப்பட உள்ளது appeared first on Dinakaran.