
சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மத்திய, மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகளுக்கு தேசிய அளவிலான தனித்துவ அடையாள அட்டை பெரிதும் பயன் தரக்கூடியது.அந்த வகையில் தனித்துவ அடையாள அட்டை எண் இருந்தால் மட்டுமே விவசாயிகள் பிஎம் கிசான் நிதியின் மூலம் பயன்பெற முடியும்.
எனவே விவசாயிகள் எவ்வித கட்டணமுமின்றி தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை சம்பந்தமாக வரும் 15ம் தேதிக்குள் (15.04.2025) பதிவு செய்து கொள்ள காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பதிவு செய்யும் இடங்கள் பொது சேவை மையங்கள் (CSCs), இ-சேவை மையங்கள் என குறிப்பிடப்பட்டது.ஆனால் சிறு, குறு விவசாயிகள் உள்ளிட்ட பெரும்பாலான விவசாயிகள் இன்னும் தனித்துவ அடையாள அட்டை எண் பெற பதிவு செய்யவில்லை. பதிவு செய்வதால் மத்திய, மாநில அரசின் திட்டங்களின் பயன்கள் கிடைக்கும் என்பது குறித்த விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
சிறப்பு முகாம்கள் அமைத்து விவசாயிகள் தேசிய அளவிலான அடையாள அட்டை எண்ணுக்கு விண்ணப்பிக்க முயற்சிக்க வேண்டும்.. அப்போது நிலத்தின் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பதிவு செய்து கொள்ள கூற வேண்டும். இதன் மூலம் விழிப்புணர்வு இல்லாத சிறு, குறு விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள், வேளாண் வங்கி கடன் ஆகியவை பெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
எனவே மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற ஏப்ரல் 15 க்குள் பதிவு செய்ய வேண்டும் என்ற கால நிர்ணயத்தை நீட்டிக்கவும், அனைத்து விவசாயிகளும் பயன் பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் .