
சென்னை,
சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கோடை காலத்தில் வெயிலால் பயணிகள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே, சாதாரண மின்சார ரெயிலுக்கு பதிலாக முழுவதுமாக ஏ.சி. பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில்களை தயாரித்து பயன்படுத்த தெற்கு ரெயில்வே திட்டமிட்டது. இதுகுறித்து ஆய்வுகளும் செய்யப்பட்டது.
பின்னர், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று தொடங்கியது. அதன்படி இந்த ரெயில் சேவையானது சென்னை கடற்கரையில் இருந்து ரெயில் துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செங்கல்பட்டுக்கு இன்று முதல் தினமும் காலை 7 மணி மற்றும் மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படுகிறது. மேலும் மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணி மற்றும் மதியம் 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது.
அதேபோல இன்று முதல் தினமும் இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வரையும், நாளை மறுநாள் முதல் தினமும் காலை 5.45 மணிக்கு தாம்பரம் - சென்னை கடற்கரை வரையும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கடற்கரை - எழும்பூர் இடையே ரூ.35
கடற்கரை - மாம்பலம் இடையே ரூ.40
கடற்கரை - கிண்டி இடையே ரூ.60
கடற்கரை - தாம்பரம் இடையே ரூ.85
கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரூ.105
செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரூ.85
தாம்பரம் - எழும்பூர் இடையே ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.