
சென்னை,
பத்திரிகை உலகில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு சாதனைகள் படைத்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினத்தையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமூக சேவைகளை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், நினைவு இல்லத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு தினத்தந்தி குழும தலைவர் சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், மாலதி சிவந்தி ஆதித்தன், அனிதா குமரன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து, தினத்தந்தி, மாலை மலர், தந்தி டி.வி., தந்தி 1, டி.டி. நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ஹலோ எப்.எம்., கோகுலம் கதிர், சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., பெரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதேபோல், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், நாடார் சங்க நிர்வாகிகளும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.