சென்னை: டெல்லியில் கடந்த 30ம் தேதி நடந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் FICCI Turf 2024 – 14வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் 2024ம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதற்கான விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். 44வது செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப், ஸ்குவாஷ் உலகக்கோப்பை 2023, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023, சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் 2023, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் 2023, ஏடிபி சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்-2024, சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் 2024, முதலமைச்சர் கோப்பைகள், 76வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2024 போன்ற பல்வேறு போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது.
விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாட்டின் சிறந்த பங்களிப்பை இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) அங்கீகரித்து, ‘விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்’ என்ற விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இந்த விருதை எப்ஐசிசிஐ விளையாட்டு குழு மற்றும் ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பி.கே.எஸ்.வி.சாகர் மற்றும் எப்ஐசிசிஐ விளையாட்டு குழுவின் இணை தலைவர் அமித் பல்லா ஆகியோர் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோரிடம் வழங்கினர்.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, அதற்கென வழங்கப்பட்ட விருதை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
வீரர்களுக்கு இதுவரை ரூ104.22 கோடி பரிசு
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ85.99 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
The post விளையாட்டை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலத்திற்கான விருது: முதல்வரிடம் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.