புதுடெல்லி,
விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்கும் வரை இந்தியா தனது உண்மையான திறனை அடையாது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிள்ளதாவது;-
"'பணமும் இல்லை, விளையாட்டும் இல்லை - இதுதான் இன்றைய இந்தியாவில் பெரும்பாலான விளையாட்டு வீரர்களின் உண்மையான நிலை. அரியானாவில் ஒரு விளையாட்டு வீரர்கள் குழுவை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தேன்.
அந்த இளைஞர்கள் இங்குள்ள அமைப்பின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்து, உணவு, ஓய்வு மற்றும் பயிற்சி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் போராடி வருகின்றனர். இது ஒலிம்பிக் வெற்றியை இழந்ததை விட இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு.
வீரர்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் அமைப்பைக் கொண்டு வராத வரையில், அரசியல்வாதிகளுக்கு பதிலாக விளையாட்டு சங்கங்களில் விளையாட்டு வீரர்கள் பொறுப்பேற்காத வரையில், இந்தியா தனது உண்மையான திறனை அடையாது.
இந்தியாவில் எல்லையற்ற திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய முடியும்."
இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.