*டிராக்டரால் உழுது சமப்படுத்தினார்
ஓசூர் : ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால், தோட்டத்தில் டிராக்டரை வைத்து உழுது முள்ளங்கியை உரமாக்கும் பணியில் விவசாயி ஈடுபட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அக்கொண்டப்பள்ளி பகுதியில் தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், முள்ளங்கி, கொத்தவரை போன்ற காய்கறிகளும், புதினா, கொத்தமல்லி மற்றும் கீரை வகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதமாக, ஓசூர் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால், குளிர்ச்சியான முள்ளங்கி விலை குறைந்து, மார்க்கெட்டில் வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பெரிய வணிக நிறுவனங்களில் இருந்தும் ஆரடர்கள் வரவில்லை. இதனால் முள்ளங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அதனை அறுவடை செய்யாமல் டிராக்டர் கொண்டு உழுது நிலத்திற்கு உரமாக்கி வருகின்றனர்.
இது குறித்து அக்கொண்டப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமி கூறுகையில், ‘சுமார் 2 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளேன். அதன் மூலம் சுமார் 20டன் முதல் 25 டன் வரை முள்ளங்கி அறுவடை செய்திருக்கலாம்.
இதற்காக ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் முதல் ரூ.80ஆயிரம் வரை செலவாகி உள்ளது. தற்போது மார்க்கெட்டில் முள்ளங்கியை வாங்க ஆளில்லாததால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், முள்ளங்கியை டிராக்டர் கொண்டு உழுது, நிலத்திற்கு உரமாக்கி வருகிறேன்,’ என்றார்.
The post விலை வீழ்ச்சியடைந்ததால் முள்ளங்கியை உரமாக்கிய விவசாயி appeared first on Dinakaran.