புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக செய்தது. கடந்த 2021 முதல் மத்திய அரசு கேட்டபோது இத்திட்டம் வேண்டாம் என ஒருமுறை கூட திமுக சொன்னதில்லை என மத்திய அமைச்சர் முருகன் குற்றம்சாட்டினார்.
புதுவை பல்கலைக்கழக மாநாட்டு அரங்கில் நடந்த சர்வதேச உளவியல் மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிம வளத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் தொல்லியல் பகுதி, விவசாய பாதிப்பு, பிற பாதிப்புகளை விளக்கி கூறினர். இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். இதற்காக மதுரை மேலுார் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.