தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டதில் அதில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் முத்திரைகள், மண் குவளைகள், கண்ணாடி மணிகள், சூது பவளம், தீப விளக்குகள், ஆபரணம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் கூடுதலாக பொழுது போக்கிற்காக பெண்கள் பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்துள்ளன.
இதன் மூலம் முன்னோர்கள் பொழுது போக்கிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது. ஏனெனில் 3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் பாண்டி விளையாட்டுக்கு பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஏராளமாக கிடைத்து வருகின்றன. முதல் இரண்டு கட்டங்களிலும் சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்லுவட்டுகள் மட்டுமே கிடைத்தன. மேலும் பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கு சுடு மண்ணால் செய்யப்பட்ட ஆட்ட காய்கள், தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இதுவரை 3,200 பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.