மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவு

2 hours ago 1

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. நடப்பு 2024-2025 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் மராட்டிய தலைநகர் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே 508 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட உள்ளது. ஜப்பானின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இந்த புல்லட் ரெயில் திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.1.08 லட்சம் கோடி ஆகும்.

இதில் ரூ.10 ஆயிரம் கோடியை மத்திய அரசின் தேசிய அதிவிரைவு ரெயில் கழகமும், மராட்டிய மற்றும் குஜராத் மாநில அரசுகள் தலா ரூ.5 ஆயிரம் கோடியையும் செலவிடுகிறது. மீத தொகை ஜப்பான் நாடு வழங்கும் கடன் மூலம் பெறப்படுகிறது. இந்த புல்லட் ரெயில் மும்பை மற்றும் ஆமதாபாத் இடையேயான தூரத்தை சுமார் 3 மணி நேரத்தில் கடக்கும். தற்போது, இந்த வழித்தடத்தில் செல்லும் அதிவேக ரெயில் இந்த தூரத்தை கடக்க சுமார் 6 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் 47.17 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை இந்த திட்டத்துக்கு ரூ.67,486 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் ரெயில் கட்டமைப்பு விரிவாக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், பெட்டிகள், என்ஜின்கள் ஆகியவை உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article