விராட் கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது சரியான முடிவல்ல - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

2 months ago 15

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். ஆரம்பம் ஆன முதலே ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராகவும் சாதனை படைத்துள்ளார். மேலும் 2013-ம் ஆண்டு முதல் 2021 வரை அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இருப்பினும் கோப்பையை வெல்ல முடியாததால் கேப்டன் பதவியிலிருந்து விலகி சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

அந்த சூழலில் அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் வீரராக விராட் கோலியை ரூ.21 கோடிக்கு தக்க வைத்துள்ளது. மேலும் ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகியோரையும் தக்க வைத்துள்ளது.

ஆனால் விராட் கோலிக்கு பின் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாப் டு பிளெஸ்சிசை நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. அதனால் அந்த அணியின் கேப்டன்ஷிப் பதவியை மீண்டும் விராட் கோலி ஏற்பார் என்ற செய்திகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில் சமீபத்திய வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே கோலியை மீண்டும் கேப்டனாக நியமிப்பது சரியான முடிவல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உங்களுடைய மனதில் விராட் கோலியின் நட்சத்திர அந்தஸ்தை நீக்கிவிட்டு ஐ.பி.எல். தொடரில் அவருடைய செயல்பாடுகளை மட்டும் பாருங்கள். குறிப்பாக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவருடைய செயல்பாடுகளை தனித்தனியாக பாருங்கள். அதை பார்த்து விட்டு அவரை மீண்டும் கேப்டனாக நியமிக்கலாமா என்பது பற்றிய சரியான முடிவை எடுங்கள். கடந்த வருடம் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150. அதற்கு முந்தைய வருடங்களில் 120.

எனவே ஒரு டி20 பிளேயராக விராட் கோலி தாக்கத்தை ஏற்படுத்துவாரா? அவர் விராட் கோலியாக இருப்பதால் 95 சதவீத ரசிகர்கள் கேப்டனாக விரும்புவார்கள். அவருடைய செயல்பாடுகளை பார்க்கும்போது அது போதுமானதாக இல்லை. அதுவே என்னுடைய பிரச்சினை. நான் அவர் ஹீரோ என்பதற்காக முடிவை எடுக்க மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அவர் சுமாரான பார்மில் இருக்கிறார். ஆனால் இந்தியாவுக்கு அவர் தேவை. டி20 கிரிக்கெட்டில் அவர் 7 - 8 வருடங்களுக்கு முன்பிருந்த சிறந்த வீரராக தற்போது இல்லை" என்று கூறினார்.

Read Entire Article