கேப்டவுன்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. அதுபோக ஏலத்தில் பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் , புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியுள்ளது.
ஆனால் கடந்த சீசனின் கேப்டனான பாப் டு பிளெஸ்சிசை அந்த அணி கழற்றி விட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது மிகச்சிறப்பான முடிவாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு என்னை பொறுத்தவரை விராட் கோலி மட்டும்தான் ஒரே வழி என்று நினைக்கிறேன். ஏனெனில் தனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் முன்பு இருந்ததை விட அதிக உத்வேகத்துடன் காணப்படுகிறார். அதோடு அவரால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் ரன்களை குவித்து மேட்ச் வின்னராக செயல்பட முடியும்.
அதன் காரணமாகவே அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமின்றி பெங்களூரு அணிக்காக அவர் ஐ.பி.எல். தொடர் ஆரம்பித்ததில் இருந்தே இருக்கிறார். அவரும் அந்த அணியும் கோப்பையை வெல்ல வேண்டும் அதற்கு கோலி கேப்டனாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
டி வில்லியர்ஸ், பெங்களூரு அணியில் விராட் கோலி தலைமையில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.