வயநாடு,
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லி என்ற இடத்தில் காபி தோட்டம் உள்ளது. இதில் ராதா (வயது 45) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அவருடைய உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. உடலின் ஒரு பகுதியை புலி தின்றிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. வயநாட்டை சேர்ந்தவரான மின்னு மணி, அவருடைய சமூக ஊடக பதிவில், புலியை விரைவில் பிடித்து, உள்ளூர் மக்களுக்கு அமைதி தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு வயநாடு தொகுதியின் எம்.பி.யான பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். நேற்று மாலையும் புலி அந்த வழியே சென்றது. இதனால், மக்களிடையே அச்சம் அதிகரித்து உள்ளது. புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியை வன துறை தொடங்கியுள்ளது.