புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி நவீன் கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேக 27,000 ரன்கள் என ஏராளமான வரலாற்று சாதனைகள் படைத்து கோலாச்சி வருகிறார்.
இருப்பினும் தற்சமயம் மோசமான பார்ம் காரணமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். 36 வயதான அவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இதனால் விரைவில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பார் என்று கருத்துகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் விராட் கோலி விரைவில் குடும்பத்துடன் லண்டனில் குடியேறுவார் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஆம், விராட் தனது குழந்தைகள் மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார். அவர் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேறுவார். கிரிக்கெட்டைத் தவிர்த்து விராட் கோலி தனது பெரும்பாலான நேரத்தை தனது குடும்பத்துடன் செலவிடுகிறார்' என்று கூறினார்.
அவர் கூறுவது போலவே விராட் கோலி போட்டிகள் இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் லண்டனிலேயே தனது நேரத்தை செலவிடுகிறார்.