திருவல்லிக்கேணி, மேயர் சிட்டிபாபு தெருவில் இருக்கக்கூடிய, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “ ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை’’ பற்றித்தான் இந்தத் தொகுப்பில் நாம் தரிசிக்க இருக்கிறோம். மேயர் சிட்டிபாபு தெருவில் நுழைந்து, சற்று நடுப்பகுதியை அடைந்ததும். வண்ணமயமான, புதியதாக வண்ணங்கள் தீட்டப்பட்ட அழகிய, வடக்கு நோக்கி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலின் கோபுரம் தென்பட்டது.
பழங்காலத்து அனுமன் கோயில்
கோபுரத்திற்குள் உள்ளே நுழைந்ததும், நுழைவாயிலில் மிகப் பெரிய இரண்டு இரும்பினாலான பழங்காலத்து கதவுகள் காணப்படுகின்றன. அதைக்கண்ட உடனே, சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் பழமையாக இருக்கலாம் என எனக்குள் தோன்றியது. அதுபோலவே, “ ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை செய்த 732 வீர ஆஞ்சநேயர்களில் (இந்தியா முழுவதிலும்) இந்த திருக்கோயிலில் காட்சியளிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரும் ஒன்று’’ என்றும், கி.பி. 1522ல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் என்றும் கோயிலின் கல்வெட்டும் கூறுகிறது.
கல்வெட்டு இருக்கும் இடத்தின் சற்று தொலைவில், சிறிய அளவிலான விநாயகர் சந்நதி இருக்கின்றது. சந்நதிக்கு ஏற்றாற் போல் விநாயகரும் சிறிய வடிவிலேயே காட்சியளிக்கிறார். விநாயகர் சிறிய வடிவிலானாலும், அவரிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால் பலன்கிட்டும் என்கிறார், கோயிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்.
கம்பீர மாருதி
அதே கல்வெட்டின் எதிர்புறத்தில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த “ ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரும், மிகச் சிறிய அளவிலேயே காட்சியளிக்கிறார். ஆனால், அவரை பார்த்த மாத்திரத்தில் முதல் தரிசனத்திலேயே மனதிற்குள் ஏதோ சொல்ல முடியாத, விவரிக்க முடியாத ஆனந்தம் பிறக்கிறது. அதை நம்மால் நன்கு உணர முடிகிறது.
பின்னே… மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் ஆயிற்றே! அதுமட்டுமா… எத்தனை நூற்றாண்டுகளாக, மழை வந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி, வெள்ளமே வந்தாலும் சரி, இடைவிடாது மந்திரங்களை உச்சரித்து பூஜைகளை செய்து வருகின்றார்களே… அதன் சாந்நித்தியம் நிச்சயம் இருக்கும் அல்லவா!
ஆஞ்சநேயருக்கு மேலே, ராமர் – சீதா விக்ரகங்கள் காட்சியளிக்கின்றன. அவைகளுக்கு, துளசிமாலையினால் (ருத்திராட்சம் போல் வைணவர்களுக்கு துளசிமாலை) அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆஞ்சநேயஸ்வாமிக்கு வாயில் வெண்ணெயும், சம்பங்கி பூக்களினால் மாலையும் சாற்றப்பட்டிருந்தது. அதனுடன், இடையிடையில் ரோஜாப் பூக்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தது. இதனையெல்லாம் ரசித்தபடியே நாம் ஆஞ்சநேயருக்கு முன் அமர்ந்துகொண்டோம்.
மூலவரான ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அருகில், உற்சவர் அனுமனும் வீற்றிருக்கிறார். இந்தக் கோயிலைப்பற்றி மேலும் சிலவற்றை அறிந்து கொள்ள, கோயில் அர்ச்சகரான, கோபி ஆச்சாரிடம் கேட்டறிந்தோம். அவர்
கூறியதாவது;
ஏன் அனுமனை பிரதிஷ்டை செய்தார்?
இந்த ஆஞ்சநேயர் கோயிலை நான் இரண்டு ஆண்டுகளாகத்தான் பூஜித்து வருகிறேன். ஆனால், “இங்கு வசிக்கும் பக்தர்கள், ஆஞ்சநேயரை சிறுவயது முதல் பார்த்து, வளர்ந்து வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டாலோ அல்லது பிரார்த்தனைகள் இருந்தாலோ, இந்த வீர ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டால் உடனடியாக காரியங்களை சித்திக்கிறார்’’ என்று இங்கு வசிக்கும் பக்தர்களே என்னிடத்தில் கூறியிருக்கிறார்கள்.
“ஏன் அனுமனை வியாசராஜர் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?’’ என்கின்ற கேள்வியை அவரிடத்தில் கேட்டோம், “அனுமா – பீமா – மத்வா’’ (மத்வரின் மூன்று பிறவிகள்) என்பது தெரிந்ததே. மத்வரின் வழிவந்த ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர், குருவின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து, அனுமனையும் குருவாக ஏற்று, தான் எங்கு சென்றாலும் அங்கு ஒரு அனுமனை பிரதிஷ்டை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்,
வியாசராஜர்.
எதையும் கேட்காமல் கொடுக்கும் அனுமன்
இக்கோயிலில், அனுமன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆஞ்சநேயரிடத்தில் இன்னயின்ன வேண்டும் என்று நாமும் சரி, பக்தர்களும் சரி வேண்டிக் கொள்வதில்லை. அவரின் முன் நின்றால் போதும். நமக்கு எதுயெது வேண்டும் – வேண்டாம் என்பதனை அறிந்து, அனுமனே நமக்கு அனைத்தையும் கொடுத்து விடுவார்.
உதாரணத்திற்கு; நான் ஆஞ்சநேயரை பூஜித்து வருகிறேன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில், எனது குறைந்த வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியுமா? ஆனால், என் குடும்பம் நன்றாக இருக்கிறது, நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று சொன்னால், இந்த அனுமனே எனக்கு அனைத்தையும் கொடுத்து வழிநடத்துகிறார். என் குடும்பத்திற்கு எது தேவையோ அதை அனுமன் கொடுக்கிறார்!” என்று பூரிப்போடு அர்ச்சகர் கூறினார்.
வேதவியாசர் சாளக்கிராமம்
மேலும், அவர் கூறியதாவது; “மூலவரான வீர ஆஞ்சநேயஸ்வாமி, அவருடன் உற்சவர் இவை தவிர, கோயிலில் எட்டு சாளக்கிராமங்கள் இருக்கின்றன. அவைகளில் குறிப்பிட்டு சொல்லவேண்டு மெனில், மத்வரின் குருவான வேதவியாஸரின் சாளக்கிராமம், நரசிம்மர் சாளக்கிராமம் ஆகியவை இந்த கோயில் சிறப்பினில் ஒன்று.
தினம்தோறும் முதலில் சாளக்கிராமங்களுக்கு அபிஷேகங்களை செய்து, அந்த அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அனுமனுக்கு கொடுக்கிறோம். அதுதான் அனுமனுக்கு பிரீத்தி. அனுமனுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்வதைவிட, சந்தனத்தால் அபிஷேகம் செய்வதைவிட, சாளக்கிராமத்திற்கு செய்த அபிஷேக நீரைக்கொண்டு, ஒரே ஒரு உத்தரணியால் அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் போதும், அவன் மனம் குளிர்கிறது.
பத்து நாட்கள் ராமநவமி
ராமநவமி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகின்றன. வருகின்ற மார்ச் – 28 முதல் ஏப்ரல் – 06 வரை பத்து நாட்கள் ராமநவமி வெகுவிமரிசையாக நடைபெறும். ராமநவமி தினமான வருகின்ற ஏப்ரல் – 06 அன்று ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும். நடந்து முடிந்த அனுமன் ஜெயந்தி அன்று, முதல் முறையாக உற்சவர் அனுமனை திருவீதி புறப்பாடு செய்து, பக்தர்கள் கண்குளிர செய்துள்ளோம்.
அதே போல், வரும் ஏப்ரல் மாதத்தில் “ராம நவமி’’ அன்றும் உற்சவர் அனுமனை திருவீதி புறப்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், கோயிலை விரிவாக்கம் செய்யவும் ஒரு யோசனைகள் இருக்கின்றது’’ என்று தன் பேச்சினை முடித்துக் கொண்டார்.
மெய்சிலிர்க்க வைக்கும் சிற்பங்கள்
இந்த திருக்கோயினுள், மிகப்பெரிய மரம் ஒன்று உள்ளது. அதன் ஒரு பகுதியில் நாகரர்கள் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். மறுபுறம், செந்தூர அனுமனை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். இந்த செந்தூர அனுமனைப் பக்தர்கள், தொட்டு பூஜை செய்யலாம். இவர்களை தரிசித்த பின்னர், பிராகாரத்தில் உள்ளே கல்யாணத் திருக்கோலத்தில் இருக்கும் ராமர், சீதா, ஆகியோரின் சிற்பங்கள், வண்ணங்கள் பூசப்பட்டு அழகாய் காட்சியளிக்கின்றன.
இவர்களோடு அனுமன் கீழே அமர்ந்து கைகூப்பியபடியும், மற்ற தேவர்களான பிரம்மா, சிவன், விநாயகன், முருகன் ஆகியோர், ராமர், சீதாவின் அருகில் காட்சியளிக்க, இந்த அத்தனை சிற்பங்களின் வலதுபுறத்தில் தனிச் சிற்பமாக அனுமன், ராமபிரானை நினைத்து தியானிப்பதை போல் பச்சை நிறத்தில் அழகிய சிற்பமும், இடதுபுறத்தில் கல்பவிருக்ஷம், காமதேனுவுடன் ராகவேந்திரஸ்வாமி ஆசீர்வதிக்கும் சிற்பமும் நம்மை பரவசத்திலும், பக்தியிலும் மூழ்கடிக்கச் செய்தது. மேலும், பிராகாரத்தில் வியாசராஜரை போற்றும் விதமாக, விஜயநகர சாம்ராஜ்ய அரசரான கிருஷ்ண தேவராயர் அவையில், அவரின் சிம்மாசனத்தில் அமர்ந்து, தான் ஒருநாள் ராஜாவாக பதவி ஏற்று, ஜாதகப்படி சர்ப்பத்தினால் ஆபத்துக்குள்ளான கிருஷ்ணதேவராயரை காப்பாற்றிய அற்புதமான சம்பவத்தை விளக்கும் படத்தை மிகப் பெரியளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 முதல் 11.00 வரை, மாலை 5.00 முதல் 8.00 வரை. சனிக்கிழமைகளில் கூடுதல் நேரம் திறந்திருக்கும்.
எப்படி செல்வது: அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில், நம்பர் 10, மேயர் சிட்டிபாபு தெரு, திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை – 600005. தொடர்புக்கு: 96064 26934 (திருவேட்டீஸ்வரர் கோயிலின் பின்புறத்தில் இந்த அனுமன் கோயில் உள்ளது)
The post வியாசராஜருக்கு குருவருள்புரியும் அனுமன் appeared first on Dinakaran.