நாகர்கோவிலில் வீட்டின் மாடியில் தஞ்சம் அடைந்த மிளா: 3 மணிநேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

4 hours ago 2

நாகர்கோவில்: நாகர்கோவிலில் மிளா வீட்டின் மாடியில் ஏறி நின்றதால், பரபரப்பு ஏற்பட்டது. மாடி வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கதவை பூட்டி உள்ளே இருந்தனர். வனத்துறை, தீயணைப்பு துறையினர் மிளாவை பிடித்து சிகிச்சை அளித்தனர். நாகர்கோவில் பள்ளிவிளையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான குடோன் உள்ளது. இன்று அதிகாலையில் இந்த பகுதியில் மிளா ஒன்று நடமாடியது. அங்கும், இங்கும் ஓடிய மிளா, திடீரென குடோனுக்கு எதிர்புறம் அமைந்துள்ள பால்பண்ணை தெருவுக்குள் நுழைந்தது. அங்கிருந்த ஒரு வீட்டின் மாடியில் ஏறி அப்படியே சிலை போல் நின்றது.

இதனால் மாடி வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கதவை உள் பக்கமாக பூட்டியவாறு இருந்தனர். பொதுமக்கள் விரட்டியும் மிளா நகர வில்லை. மிளாவின் உடலில் காயங்களும் இருந்தன. உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காலை 8 மணி அளவில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டின் மாடியில் நின்ற மிளா பின்னர் அங்கிருந்து தப்பி தெருவில் இறங்கி ஓடியது. வனத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் கையில் வலையுடன் அதை விரட்டினர்.

பின்னர் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி உள்ளே குதித்த மிளாவை வலை விரித்து பிடித்தனர். காலை 11 மணியளவில் மிளா பிடிக்கப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, மிளா உடலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் மிளாவை காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சுங்கான்கடை மற்றும் அதை சுற்று வட்டார மலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மிளா உள்ளிட்டவை ஊருக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post நாகர்கோவிலில் வீட்டின் மாடியில் தஞ்சம் அடைந்த மிளா: 3 மணிநேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article