பட்டீஸ்வரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமலிங்க சுவாமி கோயிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு

4 hours ago 2

கும்பகோணம்: பட்டீஸ்வரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட ராமலிங்க சுவாமி கோயிலில் கருங்கல்லில் கட்டப்பட்ட பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்கள் கால மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராஜராஜசோழனின் 5வது மனைவியான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளிப்படை கோயிலாகும். பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார்.

சிற்றன்னையின் நினைவாகத்தான் மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலை ராஜேந்திரசோழன் அமைத்தார். சிதிலமடைந்து காணப்பட்ட அக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோயிலின் வடக்கு பிரகாரத்தில் நேற்று புதிய கருங்கல் தளம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டபோது பாதாள அறை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அந்த பாதாள அறையை பார்வையிட்டனர். அந்த அறை முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தொல்லியல்துறையினருக்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் வந்து பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் கல்லூரி மாணவர்களுடன் கோயிலுக்கு வந்து பாதாள அறையை பார்வையிட்டார். இந்த அறையின் ஆழம் சுமார் 8 அடி, நீளம் 15 அடி இருந்தது. இதுகுறித்து பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ள இந்த பாதாள அறை படையெடுப்புகளின் போது விக்கிரகங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மறைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். தொல்லியல்துறையினர் ஆய்விற்கு பின்பு, அதில் உள்ள மணல்களை வெளியே எடுத்தால் தான் அறையில் விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதா என தெரியவரும் என்றார்.

The post பட்டீஸ்வரத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமலிங்க சுவாமி கோயிலில் பாதாள அறை கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article