சென்னை: சென்னையில் விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு காரை நிறுத்தி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முதலுதவி அளித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் கோபாலபுரத்தில் ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’ கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியில் தயார் நிலையில் உள்ள பணிகள் மற்றும் ஏற்பாடுகளை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வை முடித்து துணை முதல்வர் சென்னை ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கார் ஒன்றும் ஆட்டோவும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனே தனது காரை நிறுத்த சொன்னார். தனது காரில் இருந்து இறங்கிய உதயநிதி ஸ்டாலின் ஆட்டோ ஓட்டுநருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி அளித்தார். பிறகு உடனே அவரை அருகே இருக்கும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநருக்கு, முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.
The post விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் காரை நிறுத்தி முதலுதவி அளித்த துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.