புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில், விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக பாஜக தலைவர் கூறினார். டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா அளித்த பேட்டியில், ‘முந்தைய ஆம்ஆத்மி ஆட்சி காலத்தில், விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில் போலிப் பயனாளிகளின் பெயர்களைச் சேர்த்து, ஆண்டுக்குச் சுமார் 200 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 3.81 லட்சம் பயனாளிகளில், 2.98 லட்சம் பேர் மட்டுமே உண்மையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம், 83,000க்கும் மேற்பட்ட போலிப் பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் மிகவும் நலிவடைந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிதியை, முந்தைய ஆம் ஆத்மி அரசு முறைகேடாகச் சுரண்டியுள்ளது.
இந்த முறைகேடு குறித்து, தற்போதுள்ள முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். மேலும், ஆம் ஆத்மி ஆட்சியின்போது பதவியில் இருந்த இந்நாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய சட்டப்படி பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இந்த ஊழல் மூலம் அபகரிக்கப்பட்ட பணம் எங்கே சென்றது? என்பதை டெல்லி மக்கள் அறிய விரும்புகிறார்கள். இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்க வேண்டும்’ என்றார். மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இதுவரை பதிலளிக்கவில்லை என்றாலும், இந்தக் குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post விதவை பென்ஷன் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஊழல்: முந்தைய ஆம்ஆத்மி அரசு மீது பாஜக பகீர் appeared first on Dinakaran.