தேவகோட்டை: தேவகோட்டை அருகே, கண்டதேவி கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவியில் பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், ஆனி தேர் திருவிழாவின்போது பிரச்னை எழுந்த நிலையில், கடந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. கடந்தமுறை தேரோட்டம் எப்படி நடைபெற்றதோ அதன்படியே இந்த ஆண்டும் நடைபெற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனித் திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் ஒவ்வொரு நாட்டார்களின் மண்டகப்படி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. நீதிமன்ற வழிகாட்டுதல்படி காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தேரோட்டத்தை காண அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இதையடுத்து, சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், காலை 6.15 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. நான்கு நாட்டார்கள், கிராம மக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். உரிய அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டுமே தேர் வடம் பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். கோயிலைச் சுற்றி அமைந்துள்ள 4 ரத வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர் பவனி வந்தது. காலை 6.15 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் காலை 7.40க்கு நிறைவடைந்தது.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, எஸ்பி சந்தீஷ், தேவகோட்டை டிஎஸ்பி கெளதம், சிவகங்கை சமஸ்தானம் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிவகங்கை மாவட்ட போலீசார் 800 பேர், வெளிமாவட்ட போலீசார் 1,200 பேர், ஊர்க்காவல் படையினர் உட்பட சுமார் 2,250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
The post தேவகோட்டை அருகே கண்டதேவியில் ஆனித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.