பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் புகுந்து தொடர்ந்து 5 காட்டுயானைகள், மா மரங்களை முறித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து வனத்துறையினர், விவசாயிகள், யானைகளை விரட்டியடித்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாரங்கல், அரவட்லா, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலப்பல்லி, ரங்காம்பேட்டை, கோக்கலூர், ஜெங்கமூர், முத்துக்கூர், டிடி மோட்டூர், கொண்டமல்லி, பத்தலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இங்குள்ள வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது அங்குள்ள விவசாய நிலங்கள், கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஜங்கமூர் கிராமத்தை சேர்ந்த ரவி, சிவனகிரி கிராமத்தை சேர்ந்த வியாபாரி ராமன் ஆகியோரின் நிலத்தில் 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தது.
அங்குள்ள நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 20க்கும் மேற்பட்ட மாமரங்களை முறித்து மாங்காய்களை சாப்பிட்டதுடன், சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், விவசாயிகளுடன் சேர்ந்து பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் 5காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் காட்டு யானையால் சேதம் ஏற்படுத்தியுள்ள விவசாய நிலத்தினை, இன்று காலை வனத்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டுனர். காட்டு யானைகள் மற்றும் வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகாதவாறு அகழிகள், பென்சிங் அமைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பேரணாம்பட்டு அருகே இன்று அதிகாலை 5 காட்டு யானைகள் அட்டகாசம்: மாமரங்கள் சேதம் appeared first on Dinakaran.