
வாஷிங்டன்,
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார். அவருடன் மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் விண்வெளி பயணம் மேற்கொண்டார். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பகோளாறு காரணமாக 2 பேரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து 9 மாதங்கள் விண்வெளியில் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தயாரிப்பான குரூ டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட 4 பேரும் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்தநிலையில் இருவரும் முதன் முறையாக தங்கள் விண்வெளி பயணம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விண்வெளியில் இருந்து தங்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விண்வெளி மையத்தில் குறுகிய நாட்களுக்கு தங்கி இருக்கும் திட்டத்துடன் சென்றோம். ஆனால் நீண்ட காலம் தங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் தயாராகத்தான் சென்றிருந்தோம். இந்தியா ஒரு சிறந்த நாடாக திகழ்ந்து வருகிறது. அங்கு ஒரு அற்புதமான ஜனநாயகம் உள்ளது.
விண்வெளியில் இருந்து இமயமலையின் அழகை பார்த்து ரசித்தேன். மிகவும் வெகுவாக அழகாக தெரிந்தது. அதன் அழகு நம்பமுடியாத அளவுக்கு மிகவும் அழகாக உள்ளது. விரைவில் இந்தியாவிற்கு வர இருக்கிறேன். மனித விண்வெளி பயணத்தில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆக்சியன் மிஷன் மூலம் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்வது குறித்து நான் உற்சாகமாக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.