
இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த அல்போன்ஸ் புத்திரன், பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து 2013 ம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு 'நேரம்' என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இரண்டாவதாக அல்போன்ஸ் புத்திரன் எடுத்தப் படம் மலையாள சினிமாவை மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. நிவின் பாலி ஹீரோவாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்களை கொண்டு 'பிரேமம்' என்ற படத்தை எடுத்திருந்தார். இது தமிழ் சினிமாவில் பார்த்து பழகிய கதைதான் என்றாலும், திரைக்கதையில் காட்டியிருந்த மேஜிக்கால் இன்றளவும் கொண்டாடக்கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கேரக்டரை மறக்கவே முடியாது. பின்னர் அவர் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார்.
தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்டரம் நோய் இருப்பதாகவும் அதனால் திரைத்துறையில் தன்னுடைய சில பொறுப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் 'நேரம்' திரைப்படம் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வாழ படக்குழுவினருடன் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.