முடிவுக்கு வந்த 4 நாட்கள் போர்

2 days ago 3

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 4 நாட்கள் கடுமையான போர் நடந்தது. கடந்த மாதம் 22-ந்தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். அதற்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30 மணி வரையில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும், பாகிஸ்தானிலும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டும் துல்லிய தாக்குதல் நடத்தியது. அதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். இந்திய ராணுவம் பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்தது.

பொதுமக்களையோ, அந்நாட்டு ராணுவத்தையோ குறிவைக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்த சம்பவத்துக்கு பிறகு எல்லையோர பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்களின் வீடுகள் மீது குண்டு பொழிந்து பெண்கள், குழந்தைகள் உள்பட பலரை உயிரிழக்க வைத்தது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் மிக வீரமாக நடத்திய தாக்குதல்கள் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்துவிட்டது. இதில் பெரிய வீர செயல் என்னவென்றால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்லாமல் இந்திய எல்லைக்குள் இருந்தே ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் ஆட்டத்தை துவம்சம் செய்தது.

பாகிஸ்தானும் இந்திய நகரங்கள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டாலும் இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசங்களான எஸ்-400 என்ற சுதர்சன சக்கரம், ஆகாஷ், பராக் ஆகியவை விண்ணிலேயே அவற்றை தூள் தூளாக்கியது. இன்னும் எத்தனை நாள் போர் நீடிக்குமோ? என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு இருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை மாலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட செய்தி எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. "நேற்று இரவு நான் நீண்ட நேரமாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முழுமையான போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த செய்தி வந்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் துணை பிரதமர் முகமது இஷாக்தார் போர் நிறுத்தத்தை அறிவித்தார். அதனைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை மாலை 3.45 மணிக்கு இருநாடுகளிடையே நடந்ததாகவும் கூறினார். சற்றுநேரத்தில் பாகிஸ்தான் தன் வான் பரப்பை இந்தியாவுக்கு திறந்துவிட்டுவிட்டது. போர் நிறுத்தம் தொடங்கினாலும், மீண்டும் இரவு 8.50 மணிக்கு பாகிஸ்தான் அதனை மீறி சில இடங்களில் குண்டு வீசத்தொடங்கியது. இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்தவுடன் தன் செயலை நிறுத்திக்கொண்டது.

அதன் பின்னர் இரவு 11 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வரத்தொடங்கியது. 93 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே அமைதி திரும்பியது. இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இந்த போர் நிறுத்தம், அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றி என்றாலும் மற்றொருபக்கம் இந்திய ராணுவத்தின் இணையில்லா வீரதீர செயல்தான் இதற்கு முக்கிய காரணம் என்று உலகம் நன்கு அறிந்திருக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு திகழவேண்டும் என்றால் வேறு ஒன்றும் தேவையில்லை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதை நிறுத்திவிட்டு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே போதும்.

Read Entire Article