இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம்: ஐ.நா. தலைவர்கள் வரவேற்பு

2 days ago 3

நியூயார்க்,

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன. ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.

இதன்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த மோதல், நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது. இருதரப்பும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் உடன்படிக்கைக்கு வந்தன. இதை ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

ஐ.நா. பொது சபையின் 79-வது அமர்வின் தலைவர் பிலிமோன் யாங், "இது பிராந்திய அமைதி மற்றும் கூட்டுறவில் இருநாடுகளின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் பதற்றத்தை குறைப்பதற்கான அர்த்தமுள்ள படியாகும்" என்று சமூக வலைத்தள பதிவு வெளியிட்டு உள்ளார்.

ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "தற்போதைய விரோதங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், பதற்றங்களை தணிப்பதற்கும் இது நேர்மறையான படி" என்று குறிப்பிட்டார்.

Read Entire Article