விண்வெளி பெண்ணே…!

3 hours ago 1

அனைத்து வசதிகளும் உள்ள ஆடம்பர அரண்மனையில் தங்கினாலும் கூட, அதிகபட்சம் ஒரு வாரம் வெளியே வராமல் இருந்தால் பைத்தியம் பிடித்து விடும். அப்படிப்பட்ட சூழலில் கிட்டத்தட்ட 9 மாதங்கள் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருப்பது சாதாரண விஷயமல்ல… உடனிருப்பவரை தவிர, வேறு மனித முகங்களையே காண முடியாமல், அந்தரத்தில், அமானுஷ்யமான மனநிலையில் 9 மாதங்களை கடந்தது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயம். அந்த வகையில் பூமிக்கு பத்திரமாக வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸின் வருகையை, நம் வம்சாவளியை சேர்ந்த ஒரு பெண் என்ற வகையில், ஒட்டுமொத்த இந்திய மக்களும் வாழ்த்தி வரவேற்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உலகமெங்கும் வலைத்தளங்களில் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. 1965, செப்டம்பர் 19ல் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் யூக்லிட் நகரில் தீபக் பாண்டியா – போனி பாண்டியா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். தந்தை தீபக் பாண்டியா இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். 1983ல் பிசிகல் சயின்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம் வென்ற சுனிதா, 1995ம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதுகலையில் பொறியியல் மேலாண்மை பட்டம் பெற்றார். போர் விமானியாகவும் சிறப்பாக செயல்பட்டவர்.

1998, ஜூனில் நாசா அவரை விண்வெளி வீராங்கனையாக சேர்த்துக் கொண்டது. இந்த சூழ்நிலையில்தான் 3வது முறையாக 2024, ஜூன் 5ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வுப்பணிகளுக்காக சக வீரரான புட்ச் வில்மோருடன் கிளம்பிச் சென்றார் சுனிதா வில்லியம்ஸ். ஸ்டார்லைனர் விண்கலத்தில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கும் இந்த முயற்சி, இருவருக்குமே சோதனையாக முடியுமென யாருமே எண்ணிப் பார்க்கவில்லை. வெற்றிகரமாக விண்ணுக்கு அழைத்துச் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இருவரும் மீண்டும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

இருவரையுமே பூமிக்கு பத்திரமாக அழைத்து வர நடந்த முயற்சிகள் யாவும் தோல்வியை தழுவின. தங்களது வீரர்கள் விண்வெளியில் நீண்ட காலம் தங்கியிருப்பதை, மிகுந்த கவலை கலந்த அக்கறையுடனே, அவர்களின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வந்தது நாசா. மீட்பு நடவடிக்கையையும் துரிதப்படுத்தியது. இதையடுத்து இந்திய நேரப்படி 18ம் தேதி காலை 8.15 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் மற்றும் 2 வீரர்களுடன், பூமியை நோக்கி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது டிராகன் விண்கலம். நேற்று அதிகாலை 3.25 மணிக்கு, 17 மணி நேர பகீர் பயணத்தை தொடர்ந்து, புளோரிடா கடலில் டிராகன் விண்கலம் இறங்கியது.

இதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தலை தொடர்ந்து, உலகமே எதிர்நோக்கிய இந்த சாகச விண்வௌி பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விண்வெளி மையத்தில் இருந்ததை விட, இனிதான் சுனிதா வில்லியம்ஸ் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். ரத்த ஓட்டம் சீராக சில நாட்கள் பிடிக்கும். இதய துடிப்பிலும் சில மாற்றங்கள் இருக்கும். செரிமான பிரச்னை என நிறைய உடல்நிலை மாற்றங்கள் இருக்கும். இவற்றை சரி செய்ய சிறிது காலமாகும் என்றாலும், இதையெல்லாம் தாண்டி அவர் மேலும் பல சாதனைகளை படைப்பார் என்பதில் சந்தேகமில்லை…

The post விண்வெளி பெண்ணே…! appeared first on Dinakaran.

Read Entire Article