சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியும் 8 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘நடந்த மக்களவை தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் மறு ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், தேர்தல் சின்னங்கள் முன்பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன. எனவே, உங்களுடைய கட்சியை தமிழ்நாட்டில் மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது’ என தேர்தல் ஆணையம் 2 தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரியபடி அக்கட்சிக்கு பானை சின்னத்தை முன்பதிவு செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இனி விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தேர்தல்களில் அக்கட்சி பானை சின்னம் கோரினால் அதை தேர்தல் ஆணையம் ஒதுக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி தங்களுடைய கட்சிக்கு ஏர் உழும் விவசாயி, புலி சின்னம் ஆகியவற்றை முன்பதிவு செய்ய கோரி வெவ்வேறு மனுக்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்தது. அந்த சின்னங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட சின்னம் அல்லது விலங்கை ஒத்து இருப்பதால் அவற்றை ஒதுக்க முடியாது என்றும் ஆணையத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள சின்னங்கள் ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து அதன் விவரத்தை தெரிவிக்குமாறும் தேர்தல் ஆணையம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
The post விடுதலை சிறுத்தைகள், நா.த.க அங்கீகாரம் பெற்ற மாநில கட்சி: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.