சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திரைப்பட கலைஞர் சத்யராஜிக்கு பெரியார் ஒளி விருது உள்ளிட்ட 7 விருதுகளை திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். குறிப்பாக அம்பேத்கர் சுடர் விருது திராவிடர் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.எஸ். சலன், பெரியார் ஒளி விருது திரைப்பட கலைஞர் சத்யராஜ், காமராசர் கதிர் விருது புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம், மார்க்ஸ் மாமணி விருது தியாகு, காயிதே மில்லத் பிறை விருது காஜாமொய்தீன் பாகவி, செம்மொழி ஞாயிறு விருது பேராசிரியர் சண்முகராஜ், தமிழறிஞர் இலங்கை அயோத்திதாசர் ஆதவன் விருது முனைவர் ஜம்புலிங்கம் பவுத்த ஆய்வறிஞர் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
The post விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகர் சத்யராஜிக்கு பெரியார் ஒளி விருது: திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.