சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாக உள்ளது.
இதற்கிடையில் விடாமுயற்சி திரைப்படமானது, 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று செய்திகள் வெளியாகி வந்தது. அதேசமயம் பிரேக் டவுன் படக்குழுவினர் விடாமுயற்சி படத்திற்கு தடையில்லா சான்று வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கேட்டதனால்தான் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் பொங்கல் ரேஸிலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது.
'பிரேக்டவுன்' 1997ம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற ஹாலிவுட் படமாகும். 'பிரேக்டவுன்' படத்தில் கணவனும் மனைவியும் சாலைபயணத்தை மேற்கொள்கின்றனர். திடீரென மனைவி காணாமல்போக நாயகன் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் கதையாகும்.
இந்நிலையில் 'விடாமுயற்சி' படமானது பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில், இயக்குனர் மகிழ் திருமேனியிடம், 'விடாமுயற்சி' படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிழ் திருமேனி, "இதற்கு பதில் நான் இப்போது சொல்ல முடியாது. ஆனால் இது என்னுடைய கதை இல்லை. கணவன் – மனைவி இடையிலான பயணமும் அதில் நடக்கும் சம்பவங்கள் தான் விடாமுயற்சி படத்தின் கதை. இதில் ஆக்சன், திரில்லர் , சஸ்பென்ஸ் என அனைத்தும் அடங்கி இருக்கும். இது எதார்த்தத்திற்கு நெருக்கமாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார்.