மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள 13 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் கடைசி 4 தளத்தில் நடிகர் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு வழக்கம் போல அவர் மற்றும் குடும்பத்தினர் தூங்க சென்றனர். அப்போது சயீப் அலிகானின் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அவரை பிடிக்க சயீப் அலி கான் முயன்ற போது அந்த நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஒடினார்.கத்தியால் குத்தப்பட்டதில், காயம் அடைந்த சயீப் அலி கானை அருகில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார்.
இந்தநிலையில் சயீப் அலிகான் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே, சத்தீஷ்கரில் சந்தே நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் சத்தீஷர் விரைந்துள்ளனர். சத்தீஷ்கரின் துர்க் மாவட்டத்தில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற நபரை சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீசார் கூறுகையில், " மும்பை போலீசார் கூறிய அடையாள விவரங்களை வைத்தும் ரயிலில் பயணிப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையி கைது செய்தோம். மும்பை போலீசாரும் அடையாளத்தை உறுதி செய்துள்ளனர்" என்றார்.